தேசிய அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் பொருளாதார வசதி இல்லாததால் பங்கேற்க முடியாமல் தவித்த மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவனுக்கு நிதி உதவி அளித்து சமூக ஆர்வலர் உதவிகரம் நீட்டிள்ளார்.


சாதனை படைக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்


பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.  இதுபோன்ற பல இன்னல்களை கடந்து ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே மறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.




நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012 -ஆம் ஆண்டு உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 -க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.




மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம்


மேலும்  இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் குத்துச்சண்டை, யோகா என பல்வேறு துறைகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்றும் வருகின்றனர். இந்த சூழலில் இந்த சமுதாயத்தை சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவன் கடந்த மே மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த நிலையில் போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. 




உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர்


இந்நிலையில் மாணவன் பற்றி பெரம்பூர் பகுதியை சேர்ந்த பாரதி மோகன் அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்து, அதனை தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் மாணவன் வீரசிவாஜி விளையாடுவதற்கான அனைத்து செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். மேலும் மாணவனை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி சமூக சேவகர் பாரதி மோகன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அடுத்த வாரம் ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த மாணவர்கள் இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 303 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.