உலகமே பாராட்டும் அளவிற்கு அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாடு நடைபெற்று இருப்பதால் எதிர்க்கட்சியினர் வசைபாட தான் செய்வார்கள், வசை பாடுபவர்களே இந்த ஆட்சியை வாழ்த்துகிற ஒரு நல்ல சூழலை உருவாக்கதான் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 


2000வது குடமுழுக்கு 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:




ஆதீனத்தின் 118 கோயில் 


தருமபுரம் ஆதீனம் அவர்கள் திமுக ஆட்சி அமைந்த பிறகு 118 வது கோயிலாக தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழாவினை நடத்தி இருக்கிறார். ஆதீனம் ஆளுகையின் இருக்கும் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக குடமுழுக்குகள் நடைபெறாமல் இருந்த சூழலில், குடமுழுக்குகளை திறப்பாக நடத்துவதற்கு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அனுமதி அளித்தது இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.




2000 ஆயிரத்தை கடந்த கோயில்கள்


திமுக ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2000 ஆயிரம் கோயில்களை கடந்து 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கிற்கு அதிக முக்கியத்துவம் தந்து, பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதால் அனைத்து திருக்கோயில்களில் உம் சுபிட்சமாக பக்தர்கள் பெருமளவு வந்து இறை தரிசனம் செய்யும் ஒரு நல்ல சூழலை இந்த துறை உருவாக்கியுள்ளது. ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து, பக்தி பரவசத்தோடு தமிழ் கூறும் ஆதீனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஆட்சியை ஆதரிப்பதும் கடந்த காலங்களில் இல்லை. இதுபோன்ற அற்புத காட்சிகளால் இறைவனும் மகிழ்ச்சி அடைகிறார்.




முத்தமிழ் முருகன் மாநாடு 


தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியில் உள்ளவர்களே முத்தமிழ் முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்ப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு? அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என எதிர் கேள்வி எழுப்பியவர், இது ஜனநாயக நாடு, அவர்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள், அதையும் நாங்கள் உள் வாங்கி கொள்கிறோம். மாநாடு குறித்து பார்ட்டுகள்தான் 99 சதவீதங்களை தாண்டியுள்ளது, குறைகள் வெறும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தான் எழுந்துள்ளது அதற்கு எதிர்மறையற்ற இந்த துறை தாயாக இல்லை. 




போராட்டங்களை தூண்ட முயற்சி 


முருகன் முத்தமிழ் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் கணக்கிட வில்லை. அவர்கள் வேறொரு கணக்கில் இருந்தார்கள். பலர் பல்வேறு வகையிலும் பல போராட்டங்களை தூண்ட பார்த்தார்கள், அனைத்தையும் உடைத்தெறிந்து உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு நடைபெற்று இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதல் முதலில் இப்போதுதான் இதுபோன்ற மாநாடு நடைபெறுகிறது. மேலும் இவ்வளவு பெரிய வரவேற்பை கண்டு எதிர்க்கட்சிகள் எப்படி பாராட்டுவார்கள்? அதைப் பற்றி வசை பாடத் தான் செய்வார்கள் என்றார். மேலும், வசை பாடுபவர்களே இந்த ஆட்சியை வாழ்த்துகிற ஒரு நல்ல சூழலை உருவாக்கதான் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.




சொத்துக்கள் மீட்பு 


கோயில் நிலங்களை பொறுத்த வரை இதுவரை 6750 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது, 6,800 ஏக்கர் அளவிற்கு இடங்கள் மீட்க்கப்பட்டுள்ளது, தொடர்ந்து ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கின்ற வேட்டையை இந்த அரசு தொடரும் எனவும், இறைவன் சொத்து இறைவனுக்கே எனவும் கூறினார். 




முழுமையாக வெற்றியடைந்த திட்டம் 


கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோயிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோயிலில் டெபாசிட் செய்ததின் மூலம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் திருக்கோயில்கள் ஆக்கு கிடைக்கிறது. மேலும் 15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோயில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இது ஒரு அற்புதமான திட்டம், அது முழு அளவில் வெற்றியடைந்தது என தெரிவித்தார்.