மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலை தாக்கியதில், அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மீனவர் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மீனவர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான ஜெயராமன். இவர் மயிலாடுதுறை-தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். ஆறுகளில் விசுறு வலை வீசி மீன்பிடிப்பதன் மூலம் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். ஜெயராமனைப் போன்று, அப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கையை கடித்த முதலை
இந்நிலையில் நேற்று மாலை ஜெயராமன் மட்டும் தனியாகச் சென்று சித்தமல்லி அருகேயுள்ள திம்மாபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். இடுப்பளவு ஆழம் கொண்ட ஆற்றில், அவர் விசுறு வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு முதலை அவரது வலது கையை கடித்தது.
உயிருக்குப் போராடிய மீனவர்
முதலையின் பிடியில் சிக்கிய ஜெயராமன், வலியால் துடித்தார். எனினும், உயிருக்குப் பயந்து போராடி, முதலையிடம் இருந்து தனது கையை விடுவித்துக் கொண்டு, கரைக்குத் தப்பித்து ஓடினார். முதலையின் தாக்குதலால் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
அதிர்ஷ்டவசமாக, அவர் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், ஜெயராமனை மீட்டு, உடனடியாக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குக் கையில் ஆறுக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகள்
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மணல்மேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் கூறுகையில், "இந்த ஆற்றில் பொதுவாக முதலைகள் நடமாட்டம் இருப்பது குறித்து மீனவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் எச்சரிக்கைகளை மீறி ஆற்றுக்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.
ஜெயராமனின் உறவினர்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் ஆற்று மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது, முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முதலையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது," என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் மீன் பிடித்து வாழும் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு, பல மீனவர்கள் தங்கள் உயிரை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மீன்வளத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஒரு கூட்டுக் குழு அமைத்து, ஆற்றில் முதலைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மீனவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள், "ஆற்றின் அருகில் உள்ள கிராம மக்களுக்கு, முதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்று தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்களுக்கு அரசு உடனடியாக நிதிஉதவி வழங்க வேண்டும்," என்று தெரிவித்தனர்.