மயிலாடுதுறையில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டம் காரர்களுக்கு இடையே மோதல் நடைபெற்ற மோதலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவரின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.                  


மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் 


மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு எளிய நடுத்தர மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு, மோடி அரசின் நாசகர பட்ஜெட்டை என கூறி அதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், சிபிஐ (எம்எல்) எல் மாவட்ட செயலாளர் என்.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.அமீர்தலிங்கம் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். 




தபால் நிலையம் முற்றுகை


தொடர்ந்து மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக முழக்கமிட்டு தபால் நிலையத்தை முற்றுகையிட்ட செல்ல முயன்றனர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி தலைமையிலான காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்து மறித்து தடுத்தனர்.




போராட்டக்காரர்கள், காவல்துறையினர் இடையே மோதல் 


அப்போது போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலர் ராமகிருஷ்ணன் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் மற்றோரு காவலர் திலகர் என்பவரது சீருடை கிழிந்தது. இதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன் என்பவரது மண்டை உடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குத்தாலம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.




சாலைமறியல் போராட்டம் 


தொடர்ந்து காவல்துறையினரை கண்டித்து போராட்டகாரர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். போலீசார் போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசாரும் போராட்டக்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்      


காவல்துறையின் அராஜகபோக்கிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறையின் மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது மயிலாடுதுறை காவல்துறை அத்துமீறி அராஜகமான முறையில் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.




இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஐயப்பன் மீது பவித்ரன் உள்ளிட்ட குறிப்பிட்ட காவலர்கள் கொடூரமாக தாக்கியதில் மண்டை உடைந்து படுகாயமடைந்துள்ளார். அதேப்போன்று வாலிபர் சங்க குத்தாலம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலினையும் கொலைவெறியோடு கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். உடனடியாக அராஜக தாக்குதலில் ஈடுப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.