பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்பு வெளியான நிலையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான அன்பழகன் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழக அரசு அறிவித்த 10 கோடி ரூபாய் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட 980 ஹெக்டேர் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும் இதுநாள் வரை வழங்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றம் சாட்டுகளை தெரிவித்து வருகின்ற 20 -ஆம் தேதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Continues below advertisement

பயிர் காப்பீட்டில் குளறுபடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் விவசாயிகள் 1 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்தனர். பயிர் காப்பிட்டு தொகையாக ஒரு ஏக்கருக்கு 570 ரூபாய் வீதம் பிரிமியம் தொகை 9 கோடியே 98 லட்சம் ரூபாய் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் 16 கிராமத்திற்கு மட்டும் பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு 500, 1000, 2000 ரூபாய் என குறைவான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. ஒருசில கிராமங்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரிடம் முறையீடு 

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கடந்த 11-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சிதிட்டபணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து பயிர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றம்சாட்டி புகார் தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு 20 சதவீதம் வழங்க வேண்டும், இல்லை என்றால் காப்பீடு எங்களுக்கு தேவையில்லை. பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா மாநிலத்தில் ஆண்டிற்கு குறுவை, சம்பா சாகுபடிக்கு தாலா 10 ஆயிரம் ரூபாய் என 20 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் தமிழக விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட 980 ஹேக்டேருக்கு தமிழக அரசு 10 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்ததாக தெரிவித்த விவசாயிகள், 8 மாதமாகியும் இழப்பீடு இதுவரை வழங்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரிடம் வைத்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் அப்போது தெரிவித்தனர். 

விவசாயிகள் கூட்டம் 

அதனைத் தொடர்ந்து இதுநாள் வரையிலும் எந்த உரிய நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கவில்லை என குற்றம் சட்டியுள்ள விவசாயிகள் மயிலாடுதுறை நகரப் பூங்காவில் டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் இயற்கை விவசாயி ஆனதாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் தலைமையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அனைத்து குறைகளும் நிறைவேற்றுவதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து மாபெரும் சாலை போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சம்பா பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.

சாலைமறியல் போராட்டம் 

பயிர் காப்பீட்டு தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும், பயிர் காப்பீட்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும், வேளாண் துறையில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20.09.2024, அன்று காலை-10.00 மணிக்கு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானத்தை நிறைவேற்றினர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.

வழக்கு பதிவு 

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி மயிலாடுதுறை நகர பூங்காவில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் அன்பழகன் பேசியுள்ளார்‌. அப்போது அவர் பேசியது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசரஸ்வதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் அரசு அதிகாரிகளை கேவலப்படுத்தி பேசியதாகவும், விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் அரசு ஊழியர்களை கேவலமாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது என்பது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.