மயிலாடுதுறை அருகே மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சென்ற இடத்தில், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதனை செய்த ஆட்சியர் அனைத்து பள்ளிகளுக்கும் ஆய்வுக்குச் செல்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் 


அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறையில் உள்ள திட்டம் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் திட்டம். இத்திட்டன் கீழ் நடைபெறும் முகாம்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.




சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்கள் 


‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை துவங்கி 24 மணிநேரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர்.




அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல் 


மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அலுவலர்கள் பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.




குத்தாலத்தில் ஆட்சியர் முகாம் 


இந்நிலையில் அத்திட்டத்தின் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக வானாதிராஜபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து அவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை ஆட்சியர் கேட்ட நிலையில், மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் தடுமாறினர். 




திணறிய மாணவர்கள் 


உடனடியாக தமிழ் ஆசிரியர் முதல் சமூக அறிவியல் ஆசிரியர் வரை அனைவரையும் ஆட்சியர் நேரில் அழைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மாவட்ட ஆட்சியர் தனித்தனியாக சோதனை செய்தார். அப்போது தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்கள் மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.‌ பின்னர் மாணவர்கள் கற்றல் திறனில் மந்தமாக இருப்பதாகவும், தினமும் 20 நிமிடம் ஆவது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை ஆட்சியர் கடிந்து கொண்டார். 




 எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் 


மேலும் தினசரி முறையான பயிற்சி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார். இதனை அடுத்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளிலும் முறையாக ஆசிரியர்கள் பணி செய்கிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் அதிகாரிகள் நீங்களே மாட்டுவீர்கள் என தெரிவித்தார்.