மயிலாடுதுறையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை ஆடியபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவரின் 20 வயதான மகன் சஞ்சீவி என்பவர் கடந்த 2020 ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அச்சம்பவத்தை மற்றவர்களிடம் கூற கூடாது எனவும், மீறி கூறினால் சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இளைஞர் போக்சோ வழக்கு கைது
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரிடம் கூறி அவர்களை அழைத்துக்கொண்டு இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றச்சாட்டு உள்ளான இளைஞர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 போக்சோ (POCSO)- வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
இறுதி விசாரணை
மேற்படி வழக்கினை அப்போதைய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி விசாரணை மேற்கொண்டு எதிரியின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி முடிவுற்ற நிலையில் இவ்வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிரடி தீர்ப்பு
இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் எதிரியான சஞ்சீவி என்பவரை குற்றவாளி என தீர்மானித்து, மேற்படி குற்றவாளி சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக மேலும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் 5000 ரூபாய் அபராதமும் விதித்தும் ஆக மொத்தம் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை ஒருகால அளவில் அனுபவிக்க வேண்டுமென அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு
எஸ்.பி. பாராட்டு
இதனை அடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் குற்றவாளி சஞ்சீவியை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் இராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் இராம.சேயோன், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த தலைமைக்காவலர் வேலண்டினா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். மேலும் நடப்பாண்டில் நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகள் தண்டனையுடன் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட எதிரிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.