கிராம சபை கூட்டங்கள் வருடத்தில் 4 முறை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2022 -ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஜனவரி.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர்.2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவம்பர் .1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1, 2025 அன்று, மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1, 2025 அன்று, மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சிகளின் நிர்வாக செயல்பாடுகள், பொதுநிதி செலவினங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள், மறுப்புகள் குறித்தும் விரிவாக இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட இருக்கின்றது.

விவாத பொருள் 

இக்கிராம சபை கூட்டங்கள், ஊராட்சி நிர்வாகத்தின் பொது நிதி செலவினங்கள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன. மேலும், கிராம நிலப்பிரிவுகள் மற்றும் கட்டட அனுமதிகள் தொடர்பாகவும், இணையவழி மூலம் மனுப்பதிவுகள் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டங்களில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இணையவழி சேவைகளுக்கு முக்கியத்துவம் 

தற்போது, அரசு புதிய முறையில், இணையவழி சேவைகள் மூலம் மனைப் பிரிப்பு மற்றும் கட்டட அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இதன்படி, சுய சான்றிதழ்கள் (Self Certification) அடிப்படையில் கட்டிட அனுமதிகளைப் பெற முடியும். இதனால் பொதுமக்கள் அங்கங்குச் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாமல் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடிகிறது. இந்த நவீன முறைகள் குறித்து கிராம சபையில் விவாதித்து, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

கிராம ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வரிகள், வரியில்லா வருவாய்கள் ஆகியவற்றையும் இணையவழி (online payment) மூலம் செலுத்தும் வசதி தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பற்றி பொதுமக்களுக்கு முழுமையாக அறிவுறுத்தி, அனைவரும் பயன்படுத்த முனைவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கூட்டங்களில் உரையாடல் நடைபெறவிருக்கிறது. இதன் மூலம் ஊராட்சிகளின் வருமானத்தை நேர்மையாகக் கண்காணிக்க முடியும்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு அவசியம்

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் (ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள்) தங்களது ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்ற நலத்திட்டப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உத்தரவு 

கிராம சபையில் விவாதிக்கப்படும் விஷயங்களுக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள, ஊராட்சிகளுடன் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும், பொதுப்பணித் துறை, குடிநீர் வாரியம், மின்வாரியம், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்டவை கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அறிவுறுத்தியுள்ளார்.