புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்தவைத்த முதல்வர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 -ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவங்கி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2021 -ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் பால்பண்ணை பகுதியில் ரூபாய் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் ஆனது நிறைவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடமாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார். முன்னதாக தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கே.என்.நேரு , ஏ.வ.வேலு , எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிராபி.ராஜா உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூபாய் 655.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் கரங்களால் வழங்கப்பட வழங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நிறைவடைந்த 71 கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் உரை
மண் மனத்துடன் நெல் மணமும் கலந்து வீசும் வண்டல் நிலமும், அழகும் வரலாற்று சிறப்பும் கொண்ட டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய விழா மற்றும் மயிலாடுதுறையை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான தேர்வு பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ தஞ்சைக்கு உட்பட்ட இந்த மூன்று மாவட்டங்களில் மயிலாடுதுறை காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்க கூடிய மாவட்டம். புகழ்பெற்ற பழமையான திருக்கோயில்களில் பல நிறைந்திருக்கக்கூடிய மாவட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் எழுநிலை மாடத்தையும், சிற்ப கலைக்கூடத்தையும் கொண்ட மாவட்டம் இந்த மயிலாடுதுறை மாவட்டம்.
மாவட்டத்தின் பெருமைகள்
மொழிப்போர் தியாகி சாரங்கபாணி, தமிழில் புதினத்தை எழுதிய முன்சிஃப் வேதநாயகம், இந்தியா விடுதலை பெற்ற நாளில் புதுடில்லியில் நாதஸ்வரம் வாசிச்ச திருவாவடுதுறை டி. என் ராஜரத்தினம் ஆகியோரது மாவட்டம். அதுமட்டுமா? தியாக மங்கை தில்லையாடி வள்ளியம்மை, சுயமரியாதைச் சுடரொளி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் மாவட்டம். அதனால தான் சாரங்கபாணி மேம்பாலம், தில்லையாடி வள்ளியம்மை நினைவு இல்லம் ஏற்படுத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் மூவலூர் மூதாட்டியாருக்கு சிலையமைத்து அவரது பெயரில் புதுமைப்பெண் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு. அதுமட்டுமல்ல முன்சீப் வேதநாயகத்திற்கு மணி மண்டபம் அமைக்க கூடிய பணி, தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்பு பணி போன்றவை நடந்து வருகிறது. இப்படி இந்த மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நாகை மாவட்டத்திலிருந்து புதிதாக உருவான இந்த மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி ஒன்றரை ஆண்டுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் கூடுதல் பெருமையும் உள்ளது. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரியதல்ல. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதுதான் முக்கியமானது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த திராவிட மாடல் அரசு இதை செய்து இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைய விழா.
திட்டங்களின் மதிப்பு
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ரூ.655 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,653 பயனாளிகளுக்கு, ரூ.143 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அது மட்டுமா. அறிவிப்புக்களை அரசாணைகளாக மாற்றும் அரசு இந்த அரசு. அரசாணைகள் உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்யும் அரசு இந்த அரசு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைச்சு திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம். ரூ.7 கோடியே 56 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று 2022-23ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சட்டமன்றத்துல அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில 27.2.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டு இங்க வர்றதுக்கு முன்பு நேற்றைய முன் தினம் அரசிதழிலும் அதை வெளியிடப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயலுக்கு வருதுன்னு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
அடுத்து இன்னொரு மிக முக்கியமான திட்டத்தையும் இங்க தொடங்கி வச்சிருக்கேன். நத்தம் இணைய வழி பட்டா என்று பெயர். கிராமப்புற மக்கள் அவர்களின் நத்தம் வீட்டு மனைக்கு பட்டா வாங்குறதுல சில சிரமங்களை சந்திக்க உள்ளதாக தெரிய வந்தது. அது எளிமையாக்குவதற்காக தான் இந்த புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு வருவாய்த் துறை வரலாற்றிலேயே கிராமப்புற நத்தம் பட்டா கணினி மூலமா வழங்குவது இதுதான் முதல்முறை. காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். அதை கணினி மூலமாக உறுதி செய்ய திட்டம் இது. முதல் கட்டமா 75 லட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமா பயன்பெற போறாங்கன்னு மகிழ்ச்சியோடு நான் தெரிவிக்க விரும்பறேன். அதுமட்டுமல்ல இன்னும் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். அதேபோல் வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும் தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி கிராமத்தில் கடைமடை நீர் ஒழுங்குகள் ரூ.44 கோடியிலும் செலவிலும் அமைக்கப்படும்.
அதோட குத்தாலம் வட்டத்தில் வாணாதிராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசனதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் கடலங்குடி கிராமத்தில் ரூ.2.40 கோடி செலவில் புதிய படுக்கை அணை அமைக்கப்படும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்காக சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீன் இறங்குதளம் ரூ.30 கோடியில் செலவில் மேம்படுத்தப்படும். நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கரை பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும். அடுத்து பூம்புகார் பகுதியில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பில் உலர் மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும். மென்பொருள் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மூன்று பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 1642 மேசைக் கணினிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள் வழங்கப்படும்.
அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சிறப்பான நூலகம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்த பார்க் அவென்யூ பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு சிறப்பான நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் அப்படின்னு சொல்றதுனா இப்படி எல்லோருக்கும் எல்லா வாய்ப்பு கிடைக்கிற வகையில் தான் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். அதனால் தான் திமுக அரசு நம்மோட அரசுங்குற அடிப்படை உணர்வு. இங்க இருக்க வேண்டிய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவரை மனசுலயும் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உருவாகியிருக்கு. தாய்மார்கள் இங்க வந்துருக்கீங்க. இன்று நம் தமிழ்நாட்டில் 1,15,16,292 மகளிருக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை கிடைக்கிறது. அது மட்டுமா? விடியல் பயண திட்டம் மூலமா 445 கோடி முறை பயணித்து மாதந்தோறும் ரூ.888 வர நமது சகோதரிகள் சேமிக்கிறாங்க.
முதல்வர் காலை உணவு திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிட்டு வளமான தலைமுறையா உருவாக்கிட்டு இருக்காங்க. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் வாயிலாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 075 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போய் சேர்கிறது. இரண்டே ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டத்தின் வாயிலாக 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். இல்லம்தேடி கல்வி திட்டம் வாயிலாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளனர். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். முதல்வரின் முகவரி திட்டம் மூலமா 19,69,000 பேர் பயன் அடைந்து இருக்குறாங்க. மக்களுடன் முதல்வர் திட்டம் மூலமா 3,40,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. வேளாண் பெருங்குடி மக்கள் நிறைந்த இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021 முதல் 2024 வரை பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 3,614 எக்டேர் நிலங்களுக்கு ரூ.96 கோடியே 40 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 400 உழவர்கள் பயன்படுத்த இருக்காங்க. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஒரு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.
இப்படி தமிழ்நாட்ட வாழ்கிற ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்துள்ளது. ஒரு புதிய திட்டம் நீங்கள் நலமா? என்ற பெயர். இந்த நீங்கள் நலமா திட்டத்தின் மூலமாக முதலமைச்சரான நான் உட்பட அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பொதுமக்கள். ஆனா உங்கள தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்க போறோம். உங்க கருத்துக்கள் பெறப்பட்டு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். தமிழ்நாட்டோட முதலமைச்சரான இருந்தாலும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு டெல்டாகாரன் உணர்வுடன் இந்த விழாவில் நான் இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். நாங்க தேர்தலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போற முகத்தை காட்ட முடியுமா? நாங்க இல்ல. அப்டி வர்றாங்க யாருன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியமில்ல. தெரியும் இல்லையா உங்களுக்கு.
பாரத பிரதமர் மோடி
இப்ப தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கப் போறாங்க. அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர தொடங்கி இருக்கிறார் நம்முடைய பாரத பிரதமர் அவர்கள். வரட்டும். வேண்டாம்னு சொல்லல. தமிழ்நாட்டுக்கு நன்மை செஞ்சிட்டு, நாம வைக்கிற மிக மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு வரட்டும். அப்படி இல்லாம தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணமும், ஓட்டு மட்டும் போதும் வராங்க. நாம கேட்பது என்ன? சமீபத்துல ரெண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடரை எதிர் கொண்டோம். அப்ப ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ. 37,000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்துவிட்டு தமிழ் நாட்டுக்கு பிரதமர் வருகிறாரா? இல்ல. ஒரு ரூபாய் கூட ஒரு சல்லிக்காசு கூட இன்னும் குடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டாங்களாம். ஆனால் தங்களின் பதவி நாற்காலியை காப்பாத்திக்கிட்டு அதுக்காக ஆதரவு கேட்டு வர்றாங்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவங்கள பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டாங்கன்னு அழுத்தந்திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு கொண்டு இருக்கும் திராவிட மாடல் அரசு பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் நிற்பார்கள் என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.