தமிழகத்தில் கடைசியாக உருவான மாவட்டம்:


மயிலாடுதுறை புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான மாவட்ட ஆட்சியர் அலுவல திறப்பு விழாவில் மாவட்டத்தை வரையறை செய்து முதல் ஆட்சியராக பணியாற்றிய ஐஏஎஸ் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் போராட்டம் மற்றும் கால்நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020 -ஆம் ஆண்டு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அதே ஆண்டு ஜூலை 15ம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28 -ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட லலிதா ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.




செயல்பட தொடங்கிய மாவட்டம்:


அதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர், மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு தற்காலிக ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.




 


புதிய ஆட்சியர் அலுவலகம்:


இந்நிலையில் 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு தீவிரம் காட்டியுள்ளது. 




ஆட்சியர் அலுவலகம் திறப்பு மக்கள் குமுறல் 


அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்ச்  4-ம் தேதி திறந்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல் மேடைக்கு செல்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அப்பகுதியில் திடீர் தார் சாலை போடப்பட்டது.




இந்நிலையில், அதேவழி வலதுபுறம் செல்லும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள கன்னித்தோப்பு பகுதிக்கு சாலை அமைக்கபடாதது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடைக்கு செல்ல அமைக்கப்பட்ட சாலையில் இருந்து அந்த பகுதிக்கு வெறும் 50 அடி தூரம் மட்டுமே இணைப்பு சாலை அமைத்தால் போதும் அப்பகுதி மக்கள் மழை காலங்களில் சேறு சகதியில் சிக்காமல் செல்லமுடியும், ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு பல லட்சங்கள் மக்கள் வரி பணத்தில் செலவு செய்து சாலை அமைக்கும் அரசு மக்களுக்கான சாலையை அமைக்காதது மிகவும் வருந்தத்தக்கது என்கின்றனர்.