ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமுதாய மாணவருக்கு அச்சமுதாயத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் சாலையில் திரண்டு பட்டாசு வெடித்து மாணவனை தோளில் சுமந்து சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


தடைகளை தாண்டி சாதிக்கும் மாணவர்கள் 


பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.  இதுபோன்ற பல இன்னல்களை கடந்து ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது  மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே மறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.




பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் சமுதாய மக்கள் 


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012 -ஆம் ஆண்டு உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 -க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும்  இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் குத்துச்சண்டை, யோகா என பல்வேறு துறைகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்றும் வருகின்றனர்.




தொடர்ந்து சாதிக்கும் மாணவர் வீரசிவாஜி 


இந்த சூழலில் இந்த சமுதாயத்தை சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவன் கடந்த மே மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பை பெற்றார். அதனை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த  ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. 




தங்கப்பதக்கம் வென்ற வீரசிவாஜி 


இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதில், 13-ஆம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் வீரசிவாஜி கலந்துகொண்டு இறுதிப்போட்டியில் பஞ்சாப் வீரரை எதிர்கொண்டு மோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். 




வரவேற்பு அளித்த கிராம மக்கள் 


வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரசிவாஜிக்கு, பல்லவராயன்பேட்டை கிராமத்தில் அச்சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் திரண்டு, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்ற மாணவனை சாலையில் இருந்து வீடு வரை தங்கள் தோளில் சுமந்துசென்று மாணவரின் வெற்றியை கொண்டாடினர். இதுகுறித்து, மாணவன் தங்கிப் பயிலும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் கூறுகையில், இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், பள்ளிக்காக விளையாட்டு மைதானம் இல்லாததால், பல கிலோமீட்டர் சென்று இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே, இப்பள்ளிக்கு என தனி விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.