மயிலாடுதுறை காவல் சரகத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடந்த கண்ணன் என்பவரது கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு, நீண்ட காலமாக நீடித்து வந்த பழிக்குப்பழி கொலைச் சம்பவங்களின் பின்னணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன் கொலை
மயிலாடுதுறை கொத்த தெருவைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் (27) கண்ணன், ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் 20 -ஆம் தேதி மயிலாடுதுறை கலைஞர் நகரைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் கண்ணனுக்கும் உணவகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் தரப்பினர் கதிரவனைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது (கு.எண். 1837/2021). இந்த வழக்கில் கண்ணன் மற்றும் அவரது ஐந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர், கண்ணன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, கண்ணனும் அவரது நண்பர் ரஞ்சித்தும் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, கதிரவன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்தத் தாக்குதலில் கண்ணனுடன் வந்த ரஞ்சித் என்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து கதிரவன் உட்பட 22 பேர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய ஐந்து குற்றவாளிகள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான இளம் பிழையாளி ஆவார். புலன் விசாரணை முடித்த பின்பு, 21 எதிரிகள் மீது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்திலும், இளம் பிழையாளி மீது மயிலாடுதுறை இளஞ்சிறார் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
பழிக்குப் பழி: அஜித்குமார் கொலை
இந்த கொலை வழக்குகளின் சங்கிலித் தொடர்ச்சியாக, கடந்த 2024 -ஆம் ஆண்டு மார்ச் 20 -ஆம் தேதி, கண்ணன் கொலை வழக்கில் 18ஆவது எதிரியாகச் சேர்க்கப்பட்ட அஜித்குமார் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, கண்ணனின் சகோதரன் மில்கி (எ) சந்திரமோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அஜித்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மில்கி (எ) சந்திரமோகன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 11 எதிரிகள் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். இந்தக் வழக்கின் புலன் விசாரணை காவல்துறையினரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அனைத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
கண்ணன் கொலை வழக்கில் தீர்ப்பு
மயிலாடுதுறை கொத்த தெருவைச் சேர்ந்த கண்ணனை, கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் கொலை செய்தது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று 31.10.2025ஆம் தேதி, இவ்வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பின்வரும் ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
* கதிரவன், த/பெ. தேவதாஸ்
* தேவா (எ) மகாதேவன், த/பெ. கஜேந்திரன்
* சேது, த/பெ சேவியர்
* சந்தோஷ், த/பெ. முத்து
* திவாகர், த/பெ. பிரபாகரன்
* கார்த்திக், த/பெ கனி
* சுபாஷ் சந்திரபோஸ், த/பெ. சுப்பிரமணியன்
* ஹரிஷ், த/பெ. முருகவேல்
* பிரித்விராஜ், த/பெ. குமார்
தண்டனை பெற்ற ஒன்பது குற்றவாளிகளும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
இந்த வழக்கை தண்டனையில் முடிப்பதற்காக சிறப்பாகப் பணியாற்றிய அரசு வழக்கறிஞர் இராம. சேயோன், புலன்விசாரணை அலுவலர், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வம், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த காவலர் மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார்.
சங்கிலித் தொடராக நடந்த கொலை சம்பவங்களின் முக்கிய வழக்கான கண்ணன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, மயிலாடுதுறை சரகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறையின் செயல்பாட்டிற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.