மயிலாடுதுறை: சுமார் 1500 ஆண்டுகள் பழமையும், சமயக்குரவர்களால் பாடல் பெற்ற பெருமையும் கொண்ட மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெறும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா, காவிரிக் கரையில் நடந்த தீர்த்தவாரியுடன் பக்திப் பரவசத்துடன் நிறைவுற்றது. குறிப்பாக, ஆலய யானை துதிக்கை தூக்கி சுவாமி அம்பாளை வழிபட்ட காட்சியும், மயில் உருவில் சிவனும் அம்பாளும் நடனமாடிய ஐதீகமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
ஆலயத்தின் தொன்மையும் தல வரலாறும்
மயிலாடுதுறை நகரின் மையத்தில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயம், தென்னகத்தின் தலைசிறந்த சிவத்தலங்களில் ஒன்றாகும். 'மாயூரம்' என்ற சொல்லுக்கு மயில் என்று பொருள். பார்வதி தேவியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதி தேவியை யாகத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றுள்ளார். அதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், தன் சொல்லை மீறி யாகத்திற்கு சென்றதால் அம்பாள் பார்வதி தேவியை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் சாபம் இட்டார். அதனால் மயிலாக மாறிய அம்பாள் பார்வதி இந்த கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் தந்து அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார். சிவபெருமான் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் இவ்வாலயத்தில் உள்ள சிவன் மாயூரநாதர் என பெயர் பெற்றார். இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோயில் இதுவாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் காவிரிக் கரை துலா உற்சவம், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஐந்தாம் நாள் உற்சவம்
இந்த ஆண்டுக்கான ஐப்பசி துலா உற்சவம் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவமான ஐதீகத் திருவிழாவான 'மயிலம்மன் பூஜை' இன்று இரவு நடைபெற உள்ளது.
முன்னதாக, மாலை நேரத்தில் பூதம் மற்றும் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். அதேசமயம், உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, சிவன் மற்றும் அம்பாள் ஆகியோர் மயில் உருவில் சிறப்பான பல்லக்கில் எழுந்தருளினர். பன்னிரு திருமுறைகள் மற்றும் சமயக்குரவர்கள் உடன் வர, இந்த உற்சவ மூர்த்திகள் அனைவரும் மேளதாளங்கள் முழங்க வீதியுலாவாகக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினர்.
காவிரிக் கரையில் தீர்த்தவாரி மற்றும் அற்புத நடனம்
வீதியுலாவின் முடிவில், பஞ்சமூர்த்திகளுக்குக் காவிரிக் கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர்.
தீர்த்தவாரிக்குப் பிறகு, சிவன் மற்றும் அம்பாள் மயில் உருவில் காவிரிக் கரையில் உள்ள ஆலய வாயிலில் சிறிது நேரம் நடனமாடினர். மயில் ஆடும் துறையான காவிரிக் கரையில், மயில் வடிவில் சிவனும் அம்பாளும் எழுந்தருளி ஆடிய இந்த ஐதீகத் திருநடனக் காட்சி, துலா உற்சவத்தின் சிகர நிகழ்வாக அமைந்தது. இந்த அற்புதக் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்துப் பக்திப் பரவசமடைந்தனர்.
பக்தியில் சிலிர்க்க வைத்த ஆலய யானை!
இந்த விழாவில் நடந்த மற்றொரு மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு, பக்தர்களிடையே பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது. தீர்த்தவாரி உற்சவத்திற்காகச் சுவாமி அம்பாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளியபோது, ஆலய வாயிலில் நின்றிருந்த கோயில் யானையான அபயாம்பிகை, தனது துதிக்கையை உயர்த்திச் சில நிமிடங்கள் சுவாமி அம்பாளை வழிபட்டபடி நின்றது. யானையின் இந்தச் செயல், இறைவனையும் இறைவியையும் அது மனமுருகி வழிபடுவதை வெளிப்படுத்துவது போல் இருந்தது. யானையின் இந்தப் பக்திமிக்க காட்சி, அங்கு திரண்டிருந்த பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஐப்பசி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் நாள்தோறும் நடைபெறும் ஐதீக நிகழ்வுகளைக் காணப் பக்தர்கள் ஆர்வத்துடன் மயிலாடுதுறையில் குவிந்துள்ளனர்.