பத்தாவது நாளாக மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


பத்தாவது நாளாக மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் பணி


கடந்த 02.04.2024 அன்று இரவு 11 மணியளவில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக  வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராகள் 49 பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 




நீர்நிலைகளில் வழியாக பயணம் செய்யும் சிறுத்தை 


கடந்த காலங்களில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் சிறுத்தையானது ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் வழிகளை அதிகமாக பயன்படுத்துவதாக அறியமுடிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு, நண்டலாறு, வீரசோழனாறு மற்றும் பழைய காவேரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது‌. அதனை அடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தின் அடிப்படையில் மஞ்சலாறு, மறையூர் பகுதியில் 3 கூண்டுகளும் ஆரோக்கியநாத பகுதியல் கூண்டும் மகிமலையாறு பகுதியில் 2 கூண்டுகளும் ரயில்வே ஜங்சன் அருகில் காவேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் ஒரு கூண்டும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 




சிறுத்தையை தொடர்ந்து இடமாறும் கேமராக்கள்


மேலும், ஏற்கனவே பல்வேறு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும்  தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மறையூர், சித்தர்காடு, ஊர்க்குடி போன்ற பல கிராமங்களில் குழுக்களாக சென்று பொதுமக்களிடம் தகவல் குறித்து விபரங்கள் சேகரித்தும் ஆங்காங்கே வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வரப்பட்டுள்ளது. 




மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை நடமாட்டம்


இந்நிலையில் சிறுத்தை கடந்த 8 -ம் தேதி மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக வனத்துறை வந்து பார்த்தபோது  கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அதில் சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டவில்லை. அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று முன்தினம் இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கேயும் கால்தடம் எதுவும் கிடைக்கவில்லை‌. மேற்கண்ட தகவல் மற்றும் கடந்த சில தினங்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும்,கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுனர்




தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் சென்றதா சிறுத்தை?


இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து அவற்றை சோதனை செய்தது அப்பகுதியில் உள்ள கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.




மீண்டும் மயிலாடுதுறையில் சிறுத்தையா?


இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக சிறுத்தை குறித்து எந்த ஒரு உறுதிபடுத்தும் படியான தகவல் வனத்துறையினருக்கு கிடைக்காத நிலையில், நேற்று மயிலாடுதுறை நகர் அருகே நல்லத்துக்குடியில் பழைய பயன்பாடற்ற ரயில்வே தடத்தில் உள்ள தார் பிளாண்டில் பணியாற்றும் ஹரிஹரன் மற்றும் சிலர் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உடனே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக செய்தி காட்டுத்தீ போல் பொதுமக்களிடம் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.  அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தெர்மல் டிரோன் கேமரா கொண்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காலை செய்த ஆய்வில் எந்த தடையமும் சிக்காத நிலையில், இந்த பகுதியில் சிறுத்தை வந்ததா என்று உறுதி செய்ய முடியாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.