சிறுத்தை தென்பட்டு இன்றுடன் 26 நாட்கள்
மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, 10 நாட்களுக்கு மேலாக தென்படாததால், வனத்துறையினர் திணறி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வனத்துறையினர் முடுக்கி விட்டனர்.
சிறுத்தை பிடிக்க எடுக்கும் நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப் பணியாளர்கள் வரவழைக்க கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கேமராக்கள் அமைத்தும், ட்ரோன் கேமரக்களை பயன்படுத்தியும், கூண்டுகள் வைத்தும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர். அதில் ஏப்ரல் 3ம் தேதி மயிலாடுதுறையில் சிறுத்தை புகைப்படம் கேமராவில் பதிவானதாக 6ஆம் தேதி புகைப்படம் ஒன்றை வனத்துறையினர் வெளிட்டனர். அதன்பின், சிறுத்தையின் நடமாட்டம் கேமராவில் பதிவாகவில்லை. சிறுத்தையின் எச்சம், சிறுநீர், காலடித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை
சிறுத்தை தஞ்சாவூர், திருவாரூர் சென்றதாக கூறிய நிலையில் அங்கு சிறுத்தை சென்றதற்கான எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரியலுார், பெரம்பலுார் எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்த வனத்துறையினர், சிறுத்தை பெரம்பலுாருக்கு சென்று இருக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர். மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவானது. அதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலான வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து நகர்ந்த சிறுத்தை அரியலுார், பெரம்பலுார் எல்லை நோக்கி சென்ற வரையிலான நிகழ்வு களுக்கு ஆதாரங்கள் கிடைத்தன. அதன் பின்னர் தற்போது 10 நாட்களாக, அது எந்த பகுதி நோக்கி செல்கிறது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஏதாவது கிராமத்தில் சென்றால், அதைப் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத் துக்கு இடமான வகையில் ஆடு, நாய் போன்றவை இறந்து கிடந்தால், அதை வைத்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்தலாம். இதுபோன்ற எந்த தகவலும் இல்லாததால், மக்கள் வசிக்கும் கிராமங்களை தவிர்த்து, வேறு எங்கா வது சிறுத்தை பதுங்கி உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார் பகுதிகளில், தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இருந்த போதிலும் மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தையும், பெரம்பலூரில் தென்பட்ட சிறுத்தை இரண்டும் ஒரே சிறுத்தைதான் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆகையால் இது வேறு அதுவேறாக கூட இருக்க வாய்ப்புள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் மயிலாடுதுறையில் சிறுத்தையா!
இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும், அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும், நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் தற்போது மீண்டும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.