மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை 


மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் தேதி சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை தேடி வந்தனர்.

  




இடத்தை மாற்றும் சிறுத்தை 


இந்நிலையில் நேற்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர். மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் ஆய்வு


இந்நிலையில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐஎஃப்எஸ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் சிறுத்தை நடமாட்டம் உள்ள சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் கால் தடத்தை வைத்தும், சாட்டிலைட் புகைப்படம் கூகுள் மேப் கொண்டும், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம், அதன் நகர்வுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வனத்துறை அதிகாரிகள், கால்நடை துறை மருத்துவர்கள் இப்பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.




சிறுத்தையை பிடிக்கும் பணி


சிறுத்தையை கண்காணிக்க ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். வெவ்வேறு இடத்தில் கேமராக்களை பொருத்தி நடமாட்டம் எங்கு உள்ளது என கண்டறிய உள்ளதாகவும் கூறினார். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், இந்த வகையான சிறுத்தை மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது எனவும், முடிந்தவரை மனிதர்களை பார்த்தால் அது விலகிச் செல்ல தான் செய்யும் என கூறினார். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இப்பகுதிகளில் 1990 காலகட்டங்களில் மட்டும் தான் சிறுத்தை காரைக்கால் பகுதிக்கு வந்ததாகவும், அதன் பிறகு தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதாக தெரிவித்தார்.




எட்டு வயது சிறுத்தை 


சிறுத்தைக்கு ஏற்படும் இடையூறுகளைப் பொறுத்து அதன் வேகம் அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும் சிறுத்தைக்கு ஏழிலிருந்து எட்டு வயது வரை இருக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அலுவலர்கள் வருகை தர உள்ளதாகவும், மூன்று கூண்டுகள் மதுரையிலிருந்து வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரவில் சிறுத்தைகளை கண்காணிப்பதற்கு தெர்மல் ட்ரோன் கேட்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அது நடமாட்டம் இருக்காது எனவும், இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்கலாம் என தெரிவித்தார்.




பள்ளிகளுக்கு விடுமுறையும், பாதுகாப்பும் 


சிறுத்தை நடமாட்டத்தால் முதல் நாள் கூறைநாடு பள்ளியில் உள்ள ஒரு புள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நேற்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாக கருதப்படும் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு நாளை ஏப்ரல் 05 -ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 4 பள்ளிகளுக்கு வனத்துறை தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




சிறப்பு குழு வருகை


சிறுத்தை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் சென்சார் கேமரா 10 பொறுத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் கூண்டு வைத்து பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தை இரவு நேரத்தில் இந்த இடத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதால் 5 கிலோமீட்டர் பரப்பளவில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை பகலில் ஓய்வெடுத்து இரவில் வேட்டையாடும் இனம் என்பதால் அதனை மாலை நேரத்தில் பிடிப்பதற்கு வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இன்று காலை மூன்று கூண்டுகளிலும் சிறுத்தை சிக்காத நிலையில் வனத்துறை அதிகாரிகள் 10 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். 




ஆட்டை கடித்ததா சிறுத்தை?


இந்நிலையில் சித்தர்காடு தண்டபாணி செட்டி தெரு பகுதியில் காவிரி கரை அருகில் ஆடு ஒன்று கழுத்துப் பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. சிறுத்தை கடித்து குதறிவிட்டதாக அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு 11 மணி அளவில் அரை மணி நேரம் நாய்கள் நாய் குலைத்தது, காலையில் எழுந்து பார்க்கும் போது ஆடு இறந்து கிடப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். சிறுத்தை தான் கடித்ததா? என்று மருத்துவக் குழுவினர் ஆட்டை பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்று உறுதிப்படுத்த முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.