ஒஎன்ஜிசி செயல்பாடுகளை கண்டித்தும், வேளாண்மண்டல பாதுகாப்பை உறுதி செய்ய கோரி வருகின்ற ஜூலை மாதம் 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.
கோட்டாட்சியரிடம் மனு அளித்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் மூடப்பட்ட எண்ணெய் எரிவாயு கிணற்றில் புதிய வேலைகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியும், பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகாவை நேரில் சந்தித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், திராவிடர் விடுதலை கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் மனு வந்து மனு அளித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த பேராசியர் ஜெயராமன்
அதனைத் தொடர்ந்து பேராசியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மயிலாடுதுறை அடியாமங்கலம் கிராமத்தில் ஒஎன்ஜிசி கட்டுப்பாட்டில் இரண்டு எண்ணெய் கிணறு உள்ளது. 2015 -ஆம் ஆண்டு அந்த எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அருகில் இருந்து தனியார் பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தனர். அதனை பார்வையிட வந்த வட்டாட்சியரும் மயக்கமடைந்தார். அரை மணிநேரத்தில் பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களது உயிர் காக்கப்பட்டது. அன்றைய தினம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி அடியாமங்கலம் கிணற்றில் எந்த பணியும் செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
ஓஎன்ஜிசி மீது குற்றச்சாட்டு
ஆனால், தற்போது அடியாமங்கலம் எண்ணெய் கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த பகுதியை ஓஎன்ஜிசி சுத்தம் செய்துள்ளனர். குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 8 கிணறுகள் மராமத்து பணிகள் மேற்கொள்கிறோம் என்று கூறி ஒவ்வொரு கிணற்றையும் ஒன்றரை மாதம் பராமரிப்பு செய்வோம் என்று கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. நாகை மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார்கள். அடிப்படை ஆவணங்களை கேட்டோம் இதுவரை கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதற்கும் சரியான பதில் கொடுக்கவில்லை. இந்த அரசுக்கு கெட்டப்பெயர் அதிகாரிகளால்தான் வந்துகொண்டிருக்கிறது.
போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிராக பழைய கிணறுகளில் சைடு ட்ராக்கிங் முறையில் பூமிக்குள் குழாய் அமைக்கப்படும் என ஒஎன்ஜிசி அறிவித்துள்ளது. ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்பு மீறி செயல்படுகிறது. ஒஎன்ஜிசி செயல்பாடுகளை கண்டித்தும் வேளாண்மண்டல பாதுகாப்பை உறுதி செய்ய கோரி அடுத்த மாதம் 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விளக்கம் அளித்த ஓஎன்ஜிசி காவேரி அஸட் குழுமப் பொது மேலாளர்
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஓஎன்ஜிசி காவேரி அஸட் குழுமப் பொது மேலாளர் மற்றும் உற்பத்திப் பிரிவு தலைவர் மாறன் கூறுகையில், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பெயரில் ஊடகங்களில் வந்திருக்கும் பேட்டிக்கு பொது மக்களின் நலன் கருதி விளக்கம் அளிக்க வேண்டியது எங்கள் கடமை. கடந்த 2015 -ஆம் ஆண்டு அடியாமங்கலம் பகுதியில் இருக்கும் MY1 மற்றும் MY2 ஆகிய கிணறுகளில் எரிவாயு கசிவு, மாணவர்கள் மயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறு.
அந்தக் கிணறுகளில் நீரியல் விரிசல் (Hydro Fracturing) முறையில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. (அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் நீரியல் விரிசல் முறை நடவடிக்கை நடைமுறையில் இருந்தது). அதன் முதல் கட்டமாக அடைபட்டிருந்த வாயுவினை வால்வு மூலமாக வெளியேற்றும் போது வந்த சப்தத்தினை வேடிக்கை பார்க்க அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூடுவார்கள் என்று அந்தப் பள்ளியே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது தான் நிஜம். யாருக்கும் மயக்கம் வரவில்லை. தாசில்தார் மயக்கம் அடைந்தார் என்பதெல்லாம் மிகைப்பட்ட கற்பனை.
கிணறுகளை நிரந்தரமாக மூடி நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
ONGC நடவடிக்கைகளால் அந்த நிறுவனத்தில் தேசநலன் கருதி மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு பகலாகப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பல்லாயிரக்கணக்கான பகுதிநேர ஊழியர்களுக்கு எப்போதும் மயக்கம் வந்ததில்லை என்பது தான் இதில் இருக்கும் நகைமுரண். அந்த இரண்டு கிணறுகளிலும் நீரியல் விரிசல் முறை இன்றி எரிவாயு உற்பத்தி சாத்தியம் இல்லை. தமிழகத்தில் நீரியல் விரிசல் செய்வதில்லை என்று 2015 முதல் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற சோதனைகள் மூலம் இந்தக் கிணறுகளில் உற்பத்தி செய்வதைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். வெகு விரைவில் இந்தக் கிணறுகளையும் நிரந்தரமாக மூடி (Abandoning) நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்யவிருக்கிறோம். இப்போது அந்த இடம் முட்காடுகளும் புதரும் மண்டிக் கிடந்ததால் சுத்தம் செய்து கிணறுகளின் தற்போதைய நிலைகளை ஆய்வு செய்ய இருக்கிறோம். தொடர்ந்து என்ன செய்ய இருக்கிறோம் என்பதை மாசுகட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் ஆகியோருக்கு சமர்ப்பித்து அதன் பிறகே அந்தக் கிணறுகளில் எங்கள் பணி தொடங்கும்.
பொதுமக்கள் மனதில் குழப்பம் ஏற்படுத்துவது சரியல்ல
மற்ற கிணறுகளின் மராமத்து தொடரும். ஒவ்வொரு கிணற்றிலும் ஒன்றரை மாதம் ரிக் வைத்திருப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. சில கிணறின் மராமத்து 10 நாளிலும் முடியலாம், சில கிணறின் மராமத்து வேலை மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகலாம்.
ONGC நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு, மத்திய மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், சுரங்கத்துறை ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடைபெறும் பொறுப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனம். தவறான புரிதல்களுடனும், தவறான தகவல்களுடனும் பொதுமக்கள் மனதில் குழப்பம் ஏற்படுத்துவது சரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.