மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், வரும் மே 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Continues below advertisement

முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மயிலாடுதுறை யூனியன் கிளப் ஆகியவை இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள யூனியன் கிளப் வளாகத்தில், வரும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கும் இந்த முகாம், மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. அந்நிறுவனங்களில் காலியாக உள்ள 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய இம்முகாம் ஒரு பாலமாக அமையும்.

Continues below advertisement

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இம்முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை:

* 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.

* டிப்ளமோ (Diploma) மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள்.

* பி.இ (B.E) உள்ளிட்ட அனைத்துப் பட்டதாரிகள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்த இலவச முகாமில் கலந்துகொண்டு பணி வாய்ப்பினைப் பெறலாம்.

முகாமின் கூடுதல் சிறப்பம்சங்கள்

வேலைவாய்ப்பு மட்டுமின்றி, வேலைநாடுநர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகப் பல்வேறு வழிகாட்டுதல்களும் இம்முகாமில் வழங்கப்பட உள்ளன.

1. வெற்றி நிச்சயம் திட்டம்: இதன் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.

2. சுயதொழில் வழிகாட்டுதல்: சொந்தமாகத் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்குத் தேவையான வங்கிக்கடன் வசதிகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படும்.

3. அயல்நாட்டு வேலைவாய்ப்பு: வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

4. போட்டித்தேர்வு வழிகாட்டுதல்:டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் குறித்து இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது

* சுய விவர அறிக்கை (Resume)

* கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் 

* ஆதார் அட்டை

* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

* மற்றும் பணி அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் நேரில் வர வேண்டும்.

பதிவு செய்யும் வழிமுறைகள் முறை

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றுத் தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய

தனியார் துறையில் வேலை தேடும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த மேலதிக விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.