மயிலாடுதுறை அருகே ஏழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டும் மருந்துகள் மூட்டையாக கட்டப்பட்டு வாய்காலில் வீசப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலவச மருத்துவமும், மருந்துகளும்  


தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இலவச மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் வழங்கப்படுவது மக்களுக்கு பெரும் பயனை அளித்துள்ளது. இந்த இலவச மருந்து மூலம் ஏழை, எளிய மக்களின் அதற்கான செலவு செய்யும் சுமை குறைகிறது. மருந்து செலவு என்பது பல குடும்பங்களுக்கு சமாளிக்க முடியாத அளவிற்கு பெரும் சுமையாக இருந்துவரும் ஒன்றாகும். இந்த அரசின் இலவச மருந்து வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் மருந்து செலவு குறித்த கவலையின்றி சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது. 




மக்களுக்கு பெரும் பயனளிக்கும் திட்டம் 


மேலும் இலவச மருந்துகள் கிடைப்பதால், மக்கள் தங்கள் நோய்களுக்கு முறையாக சிகிச்சை செய்துகொண்டு, ஆரோக்கியமாக வாழ முடிகிறது. அதுமட்டுமின்றி இலவச மருந்துகள் வழங்கப்படுவதால், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் அரசு மருத்துவமனைகளை நாடுவதால், அரசு மருத்துவமனைகளின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் மூலம் மருந்து செலவு முற்றிலும் இல்லாததால், மக்கள் பணத்தை மிச்சப்படுத்தி, அவர்களின் மற்ற அவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆரோக்கியமான மக்கள் சமுதாயம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இத்தகைய திட்டங்கள் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது.




அதிர்ச்சி சம்பவம் 


தமிழ்நாடு அரசின் இலவச மருந்துகள் வழங்கும் திட்டம், மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டமாக இருந்து வருகிறது. இவ்வாறான சூழலில் மயிலாடுதுறையில் ஒர் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நடைபெறாறுள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் 


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டியதால், சம்பா பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியது. இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகளின் தூர்வாரகோரி கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையின்  அடிப்படையில் வேளாண் பொறியியல் துறையினரால் அப்பகுதி  வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது.




வாய்க்காலில் கிடந்த மருந்து மூட்டை 


இந்நிலையில் வாய்க்கால் தூர்வாரிய பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் கிடந்துள்ளது. அதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சாக்கு மூட்டையில் ஆயிரக்கணக்கான  மாத்திரைகள் ஓ.ஆர்.எஸ். கரைசல், சிரஞ்சி ஊசிகள், சிரப் உள்ளிட்ட காலவதியாகாத மருந்துகளும், காலாவதியான மருந்துகளும் கலந்து கிடந்தன. அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மருந்துகள் இல்லை என கூறி தனியார் மருந்தகங்களில் வாங்க சொல்லும் நிலையில், அரசால் வழங்கப்படும் ஏராளமான மருந்துகள் இவ்வாறு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மேலும் அரசால் வழங்கப்பட்ட மருந்துகளை சாக்குமூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் சில வாரங்களுக்கு முன்  மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய சூழலில் வாய்காலில் மருந்துகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.