மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், படுகாயமடைந்த ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளியில் நிலவிய உட்பூசலும் மனக்கசப்பும்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட எலந்தங்குடி வேழமுறித்தான் பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் முதுநிலை உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளியின் நிர்வாகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஆசிரியர் சதீஷுக்கும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் முதுநிலை வரலாற்று ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோருக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியில் நிலவிய இந்த ஆசிரியர்களுக்கு இடையேயான உட்பூசல், மாணவர்களின் ஒழுங்கீனத்திற்கு வழிவகுத்ததா என்ற கோணத்திலும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
வகுப்பறையில் அரங்கேறிய கொடூரத் தாக்குதல்
இத்தகைய சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் சதீஷ் வழக்கம்போல் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்கு உயிரியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த மாணவர்கள் சிலர், எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர் சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் சதீஷைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
மாணவர்களின் இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன ஆசிரியர் சதீஷ், மாணவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோதும் மாணவர்கள் அவரை விடாமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் காட்சிகளை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
அடித்து உடைக்கப்பட்ட வாகனங்கள்
ஆசிரியர் மீதான தாக்குதலோடு ஆத்திரம் அடங்காத அந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் சதீஷின் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த மற்றொரு பெண் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தையும் அந்த மாணவர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாகனங்களைச் சேதப்படுத்திய சம்பவம், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியது. உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சக ஆசிரியர்கள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மாணவர்களின் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சதீஷை சக ஆசிரியர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மேல்சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சதீஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோவும் விசாரணை கோரிக்கையும்
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த நிலையில், வகுப்பறையில் ஆசிரியர் சதீஷை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கே வகுப்பறைக்குள் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தைத் தூண்டிவிட்டு, மாணவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது மாணவர்களின் ஒழுங்கீனமே இதற்குக் காரணமா என்பது குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும், இதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
