மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இன்று காலை அரசு பேருந்தும், மணல் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்து ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தை லாவகமாக வயல்வெளியில் இறக்கிய ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 7A எண் கொண்ட அரசு நகரப் பேருந்து சேத்தூர் நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்து ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில், அப்பகுதியில் புதிய புறவழிச்சாலை (Bye-pass Road) அமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான கனரக வாகனங்கள் அப்பகுதியில் மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென பேருந்துக்கு குறுக்கே வந்துள்ளது.
ஓட்டுநரின் துரித செயல்பாடு
எதிரே வந்த லாரி பேருந்தின் மீது நேரடியாக மோதுவதை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் (38) நொடிப் பொழுதில் முடிவெடுத்து லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறம் திருப்பினார். சாலைக்கு அருகில் இருந்த பள்ளமான வயல்வெளி நிலத்திற்குள் பேருந்தை அவர் லாவகமாக இறக்கினார். நேருக்கு நேர் மோதியிருந்தால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியிருக்கும். இருப்பினும், பேருந்தை திருப்பும் போது லாரியின் மீது உரசியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது.
காயமடைந்தவர்கள் விபரம்
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் இருந்தவர்கள் கண்ணாடித் துகள்கள் பட்டதாலும், பேருந்து வயலில் இறங்கிய அதிர்வினாலும் காயமடைந்தனர். சிலம்பரசன் 38 அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள் (57) உள்ளிட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு, அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகள்
புறவழிச்சாலை பணிகளுக்காக வந்த லாரியால் விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலைத் தொடர்ந்து புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் குறுகிய சாலைகளில் அதிவேகமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ இயக்கப்படுவதே விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார், விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியைப் பார்வையிட்டனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது சாலைக் குறுகலாக இருந்ததால் ஏற்பட்ட பிழையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஓட்டுநர் மட்டும் சமயோசிதமாக பேருந்தை வயலில் இறக்காமல் இருந்திருந்தால், பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்," என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
