மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18 -ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிமீ தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணமாக வடிவமைக்கப்பட்டது. பல்வேறு சூழ்நிலைகளை கடந்து அண்ணாமலை யாத்திரையை செயல்படுத்தி வந்தார். பல கட்டங்களை கடந்து, கடந்த ஜனவரி 20 -ஆம் தேதி நடை பயணம் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களுக்காக என் மண் என் மக்கள் யாத்திரை பயணம் தடைப்பட்டதால் தற்போது பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த நடை பயணத்தை முடிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று 78வது நாளாக தனது யாத்திரை பயணத்தை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி மாலை 5 மணியளவில் தொடங்கினார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தனது நடை பயணத்தை பூக்கடை தெருவில் இருந்து தொடங்கி மயிலாடுதுறை மணி குண்டு அருகில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் செம்பனார்கோயில் கடைவீதியில் தனது பயணத்தை மேற்கொண்டு இன்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
Governor RN Ravi: நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது - ஆளுநர் ஆர்.என்.ரவி
மீண்டும் இன்று 79 வது நாளாக தனது என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை காலை சீர்காழியில் தொடங்கி கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், திட்டக்குடியில் மேற்கொள்ள இருக்கிறார். மயிலாடுதுறை அவருக்கு ஏராளமானோர் மக்கள் திரண்டு உற்சாகம் வரவேற்பு அளித்தனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமையில் பாஜகவினர் அண்ணாமலைக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். அதே ஜெயின் சமூகத்தினர் அவருக்கு தலைப்பாகை சூடியும், நரிக்குறவர் இன மக்கள் பாசி மணி அணிவித்தும் வரவேற்றனர்.
வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் அவருடன் கை குலுக்கியும், புகைப்படம், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக திருவிடைமருதூரில் தருமபுரம் ஆதீன கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.