மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மின்கம்பம் மாற்றும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த துயரமான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கோரி நடைபெற்ற போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசுப் பணி வழங்க அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனர்.

Continues below advertisement

 நடந்தது என்ன 

மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தில் நேற்று மின்வாரியத்தின் சார்பில் பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் மயிலாடுதுறை அருகேயுள்ள முடிதிருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ஒப்பந்த ஊழியர் தினகரன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவருடன் கேங்மேன் அற்புத ராஜன் என்பவரும் பணியில் இணைந்திருந்தார். மதிய வேளையில் தினகரன் மின்கம்பத்தில் ஏறிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர்மின்னழுத்தக் கம்பியில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் பலத்த மின் அதிர்ச்சிக்குள்ளான அவர் மின்கம்பியில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த அற்புத ராஜன் என்பவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார்.

 

Continues below advertisement

விபத்தில் உயிரிழந்த தினகரனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. படுகாயமடைந்த அற்புத ராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உறவினர்கள் போராட்டம் 

இதற்கிடையில், உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஒப்பந்த ஊழியர்களை இத்தகைய ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியதே இந்த அகால மரணத்திற்கு முக்கியக் காரணம் எனக்கூறி தினகரனின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) தொழிற்சங்கத்தினர் மருத்துவமனை முன்பு திரண்டனர். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பாக அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் மின் ஊழியர் சங்க நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் விடிய விடியப் போராட்டம் நீடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. இந்தச் சூழலில் தொடர்ந்து நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கவும் சுமுக முடிவை எட்டவும் இன்று காலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு தரப்பில் நாகப்பட்டினம் வட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் காளிதாஸ் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டவர் தரப்பில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் கலைச்செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்டோர் தினகரனின் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். 

கோரிக்கை ஏற்பு 

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகள் ஓரளவுக்கு ஏற்கப்பட்டு முக்கியமான உடன்பாடுகள் எட்டப்பட்டன.

அதன்படி உயிரிழந்த தினகரனின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு மற்றும் மின்வாரியத் தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து கூடுதலாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அந்த குடும்பத்திற்குச் சேர வழிவகை செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக அரசுப் பணி வழங்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் இந்த எழுத்துப்பூர்வமான உறுதியை அடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிடச் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து உடற்கூராய்வு முடிந்து தினகரனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோகத்தில் மூழ்கியிருந்த உறவினர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடலைப் பெற்றுத் தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி ஒப்பந்தத் தொழிலாளர்களை இத்தகைய உயர்மின்னழுத்தப் பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க மின்வாரியம் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.