சீர்காழி அடுத்த எடமணல் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைப்பதற்காக அரசு பொது தோப்பில் உள்ள மரங்களை வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு பொது தோப்பு 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 10 ஏக்கர் அளவில் அரசு பொது தோப்பு உள்ளது. இந்த அரசு பொது தோப்பில் பனைமரம்,  பழமையான ஆலமரம், மூங்கில் தோப்பு, வேப்பமரம், முந்திரி மரம் மற்றும் புளிய மரம், ஒதியன் மரம் உள்ளிட்ட 1500 மரங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த அரசு பொது தோப்பில் தமிழக அரசு சார்பில் சமத்துவபுரம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.


அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளரை கைது செய்ய இடைக்காலத் தடை! - நீதிபதி விதித்த நிபந்தனை




வெட்டப்பட்ட மரங்கள் 


இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மரங்களை வெட்டாமல் சமத்துவபுரம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இது தொடர்பாக பல்வேறு துறையினருக்கு கோரிக்கை மனுக்களையும் அனுப்பி உள்ளனர். இந்நிலையில்  அரசு சார்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அரசு பொது தோப்பில் உள்ள முந்திரி மரத்தை அகற்றியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முந்திரி மரத்தை வெட்டி அகற்றிய ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர் பிரதான்!




போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 


போராட்டத்தின்போது எடமணல் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைப்பதை வரவேற்கிறோம். சமத்துவபுரம் தரிசி நிலத்தில் அமைக்க வேண்டும். மாறாக மரங்களை வெட்டி சமத்துவ புரங்களை அமைக்க கூடாது என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி வட்டாச்சியர்  அருள்ஜோதி, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், சீர்காழி போலீசார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உயிர் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் மரம் வெட்டும் பணியை நிறுத்திவிட்டு ஜேசிபி இயந்திரங்களை அதிகாரிகள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.




சமத்துவபுரத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை 


இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எடமணல் ஊராட்சியில் அரசு பொது தோப்பு சுமார் 10 ஏக்கரில் உள்ளது. இதில் பனைமரம், முந்திரி மரம், ஆலமரம், மூங்கில் தோப்பு உள்ளிட்ட எண்ணற்ற மரங்கள் உள்ளன அரசு பொது தோப்பில் எவ்வித கட்டிடங்களும் கட்டக்கூடாது என்பது அரசு ஆணை உள்ளது. அதனை மீறி  மரங்களை அழித்து சமத்துவபுரம் அமைக்க கூடாது. எடமணல் ஊராட்சியில் சமத்துவபுரம் அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால் இந்தத் திட்டம் தரிசு நிலத்தில் அமைக்க வேண்டும். அரசு பொது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி சமத்துபுரம் அமைக்க ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதையும் மீறி அரசு இந்த திட்டத்தை இந்த இடத்தில் செயல்படுத்தினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.