ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்தி, மனித உரிமை கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்ததால், டி.எஸ்.பி., சுந்தரேசன் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று ஒரேநாளில் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து, நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுந்தரரேசனின் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் அன்னைஅபிராமி, ஜெயா, உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சேகர், காயத்ரி மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கை
அதில், எலந்தங்குடி, கிளியனூர், முட்டம், ஆத்தூர், மாதிரிவேளூர், புத்தூர், அகரஎலத்தூர், திருமுல்லைவாசல், சீர்காழி உள்ளிட்ட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 92 மதுப்பாட்டிகள், 29 பாண்டி சாராயப்பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதில் தொடர்புடைய பெண்கள் 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில்குமார் (51), தங்கதுரை (27), மணி (80) ஆகிய 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் (24), மணிவண்ணன் (26), அன்புமணி (40), சுரேந்தர்(25), வெங்கட்ராமன் (46) பாரதி(38), டெய்சி (58), அமுதா (36) ஆகிய 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில மது, சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சோதனை தொடரும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு, திருந்தி வாழ வேண்டும் என டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?
காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி
அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.