மயிலாடுதுறை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த 'டிட்வா' புயல் சின்னத்தின் கோரத் தாக்கத்தினால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயல் மழையினால் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால், இப்போது மனித உயிரையும் பலி வாங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பி பட்டு, கடைக்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
துயரச் சம்பவம்
டிட்வா புயலின் தாக்கத்தினால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பலத்த காற்றும், கனமழையும் விடாமல் பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாகவும், பலத்த காற்றின் வேகத்தாலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, பாகசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு வடக்கு தெருவை தெருவை சேர்ந்தவர் ராஜா என்பவரது மகன் 19 வயதான பிரதாப் வழக்கம் போலத் தனது அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சீர்காழி கடை வீதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பிரதாப், நேற்றிரவு இரவு சுமார் 10:30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
மரணக் குழி அமைத்த அறுந்த மின்கம்பி
பிரதாப் வீடு திரும்பும் வழியில், புயல் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மின் கம்பம் ஒன்றிலிருந்து மின்கம்பி அறுந்து, நிலத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையின் காரணமாக, அந்தப் பகுதியில் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. மேலும், இரவு நேரம் என்பதால் அந்த மின்கம்பி அறுந்து கிடந்ததை பிரதாப் கவனிக்கவில்லை.
இருள் சூழ்ந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரதாப் எதிர்பாராத விதமாக, அறுந்து தொங்கிக் கொண்டிருந்த அந்த உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக பிரதாப் மீது பட்டுள்ளது. உடனடியாகப் பிரதாப் மீது மின்சாரம் பாய்ந்தது.
சற்றும் எதிர்பார்க்காத இந்த மின் விபத்தில், அவர் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து உடனடியாக அப்பகுதியினர், பாகசாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் விரைந்து வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகளை வரவழைத்து அப்பகுதி மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர், உயிரிழந்து கிடந்த இளைஞர் பிரதாப்பின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் மற்றும் மின்வாரியத்தின் தரப்பில் ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தின் சோகமும், அரசின் மீதான கோபமும்
பத்தொன்பது வயதே ஆன மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தகவல் கேட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை உலுக்கியது. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மழைக் காலங்களில், பலத்த காற்று வீசும்போதும், மின் கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க, மின் கம்பிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், புயல், மழை காலங்களில் மின் இணைப்பைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இன்று ஓர் இளம் உயிர் பறிபோய்விட்டது எனப் பாதிக்கப்பட்ட செம்பதனிருப்பு பகுதி மக்கள் அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
மின்வாரியம், அறுந்து கிடக்கும் கம்பிகளைக் கவனக்குறைவாகக் கையாண்டதால் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த பிரதாப்பின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.