நவகிரகங்களில் புதனுக்கு உரிய ஆலயமானதும், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சொந்த ஊர் கோயில் என்பதால் 12 ஆண்டுகள் நிறைவேறாத நிலையில் தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செய்து நடத்தி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.
கோயிலின் பல்வேறு சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.
ஜுலை 7 குடமுழுக்கு
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற 9 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது. பொதுவாக கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயில் குடமுழுக்கு நடைபெறும். மேலும் சில தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகளை கடந்து பல கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகள் முன்பு கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றதாக தகவல்கள் இல்லை.
12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம்
மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். ஒரு மாமாங்கம் என்பது 12 ஆண்டுகளைக் குறிக்கும். தேவதா ஆராதனைக்கு குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார். 12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் காலம் ஆகும். நாம் வாழுகின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குருபகவான் இந்த அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக வைத்துக் கொள்ளலாம்.
மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்தினை புனருத்தாரணம் என்று அழைப்பர். பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பது மிகவும் விசேஷமானது.
எழுந்துள்ள சந்தேகங்கள்
இந்நிலையில் தமிழகத்தில் ஏராளமான ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலையில், பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேறாத திருவெண்காடு கோயிலில் அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடைபெறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதுமட்டுமன்றி கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலையாக போடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துர்கா ஸ்டாலின் தந்தையார் இல்லம் திருவெண்காடு கீழ ரத வீதியில் அமைந்துள்ள நிலையில், தனது சொந்த கிராம கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் துர்கா ஸ்டாலின் காரணமாகவே 12 ஆண்டுகள் பூர்த்தியாக திருவெண்காடு ஆலயத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பாழடைந்து உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கும், ஒருகால பூஜைக்கு வழியில்லாத கோயில்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்னுரை வேண்டுமென பொதுமக்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.