மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் முயற்சியாக காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு சமூக கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற பொருட்கள் தங்களது பகுதியில் விற்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் 9442626792 இந்த நம்பரில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நல்லுறவு சமூக கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் முனைப்புடன் மாவட்ட காவல்துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கரும்புள்ளி கிராமங்களில் முதற்கட்டமாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் சமூக கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் நடைபெற்ற நல்லுறவு சமூக கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பொதுமக்களிடம் இடையே எஸ்பி பேச்சு
அப்போது அவர் பேசுகையில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற பொருட்கள் தங்களது பக்தியில் விற்கப்பட்டால் காவல் துறைக்கு தகவல் தாருங்கள். உங்களது கிராமத்தை போதை பொருட்கள் இல்லாத கிராமமாக உருவாக்க கண்டிப்பாக காவல் துறை உதவியாக இருப்போம் என உறுதியளித்தார். மேலும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கும் வழிமுறைகளை விளக்கி கூறினார்.
பெண்பிள்ளைகளை திட்டாதீர்கள்
மனித உயிர் சாதாரணமானது கிடையாது. அது விலை மதிப்பற்றது. தங்களது உயிரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எக்காரணத்தை கொண்டும் தற்கொலை முயற்சிக்கு செல்லவேண்டாம், தயவு செய்து தற்கொலையை கைவிடுங்கள். பெண்பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்வது என ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள், பெண்பிள்ளைகளை திட்டாதீர்கள்.
போதைப் பொருட்களின் விற்பனை மையமாக தமிழகம் மாறிவிட்டது: தினகரன் கடும் குற்றச்சாட்டு
எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்
கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, கூல்லிப் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தங்களது பகுதியில் விற்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் நடந்தாலும் 9442626792 இந்த நம்பரில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும், ரோந்து பணி வரவேண்டும் என கோரிக்கை வைத்தீர்கள் அதனை ஏற்று இரவு நேரங்களில் உங்களது பகுதிக்கு ரோந்து பணிக்கு காவலர்களை அனுப்பி வைக்கின்றேன் என்றார்.
ஹய் ஸ்பீடு வண்டி வாங்குவதை தவிர்த்துவிடுங்கள்
தங்களது பிள்ளைகளுக்கு ஹய் ஸ்பீடு வண்டி வாங்குவதை தவிர்த்துவிடுங்கள், சின்னவண்டி வாங்கி கொடுங்கள். இருசக்கர வாகனம் இல்லாமல் இருக்க முடியாது, பெரிய வண்டி வாங்கித்தர கட்டாயம் ஏற்பட்டால் அவர்களால் சரியாக வாகனம் ஓட்ட முடியுமா? என பார்த்து வாங்கி கொடுங்கள். வண்டி ஓட்டிச்செல்லும்போது பிள்ளைகளிடம் உனக்காக இங்கு ஒரு குடும்பம் காத்துகிட்டு இருக்கு என சொல்லுங்கள்.
தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வரவேண்டாம்
அதேபோல, கந்துவட்டி, சீட்டு வட்டி இது போல தொந்தரவு இருந்தால் காவல் துறையில் தகவல் தாருங்கள், எந்த காரணத்திற்காகவும் தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வரவேண்டாம் என அறிவுருத்தினர். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.