மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் அமைந்துள்ள பாலசுப்ரமணியன் நகர். இங்கு கடந்த 20 ஆண்டுகளாகச் சாலை வசதி இல்லாமல் சேறும் சகதியுமாக உள்ளதை கண்டித்து, சாலையில் இறங்கி நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

20 ஆண்டுகாலப் புறக்கணிப்பு

சீர்காழி நகராட்சி, 8-வது வார்டில் உள்ள பாலசுப்ரமணியன் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை, இங்கே முறையான சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை இல்லாத காரணத்தால், வெயில் காலங்களில் புழுதிப் படலமாகவும், மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. அடிப்படை வசதியான சாலை வசதியை ஏற்படுத்தக் கோரி, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைக்கால அவதி

தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, பாலசுப்ரமணியன் நகரின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. சுமார் கணுக்கால் அளவுக்கும் மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்புப் பகுதியே ஒரு சகதி நிறைந்த குட்டையாகக் காட்சியளிக்கிறது.

Continues below advertisement

இந்தத் தேங்கிக் கிடக்கும் மழைநீர் மற்றும் சேறு காரணமாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் என அனைவரும் நடந்து செல்லக்கூட முடியாமல் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்களின் அச்சம்: "சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் புதர்கள் காரணமாக, எங்கள் வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்துவிடுகின்றன. குழந்தைகளுடன் வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். இருபது ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாடுவது நியாயமா?" என்று அப்பகுதிப் பெண்மணி ஒருவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியர் உத்தரவிட்டும் அலட்சியம்

கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது, பாலசுப்ரமணியன் நகரின் நிலைமை மிகவும் மோசமானது. அனைத்து வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது, இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த, அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாகச் சாலை வசதியை ஏற்படுத்தித் தருமாறு சீர்காழி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின்னரும், நகராட்சி அதிகாரிகள் இதுவரையிலும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாற்று நடும் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

நகராட்சி அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன் நகர் மக்கள், இன்று ஒன்று திரண்டனர். தங்கள் பகுதியில் உள்ள சேறும் சகதியுமான சாலையில் இறங்கி, அதனைக் வயல்போல பாவித்து, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முழக்கமிட்டபோது, "மாவட்ட ஆட்சியரே உத்தரவிட்டும், ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் கோரிக்கையைப் போர்க்கால அடிப்படையில் ஏற்று, உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், தங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், "வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்போம்" என்றும், தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்த நூதனப் போராட்டம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சீர்காழி நகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, 20 ஆண்டுகாலப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.