சீர்காழி: சீர்காழி அருகே காலிமனையில் உள்ள குப்பைகளுக்கு வைத்த தீ எதிர்பாராதவிதமாக பரவி, அடுத்தடுத்து 3 கூரை வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலான சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் சுவர்கள் இடிந்து வீடுகள் தரைமட்டமாகின.

Continues below advertisement

நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி (45). இவர் நேற்று மாலை தனக்குச் சொந்தமான காலிமனையில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் மற்றும் குப்பைகளைச் சேகரித்து தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

அப்போது வீசிய பலத்த காற்றினால், தீ எதிர்பாராதவிதமாக கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த செங்கேனி என்பவரது கூரை வீட்டிற்குப் பரவியது. தீ சுடச்சுட எரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, செங்கேனியின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

Continues below advertisement

3 வீடுகள் தரைமட்டம் - லட்சக்கணக்கில் இழப்பு

சிலிண்டர் வெடித்த வேகத்தில் தீயின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதை ஒட்டி இருந்த சந்திரா மற்றும் பக்கிரிசாமி ஆகியோரது கூரை வீடுகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. இந்த கொடூரத் தீ விபத்தில் மூன்று வீடுகளிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெறப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கப் பணம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள், ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் தீக்கிரையாகின. சிலிண்டர் வெடித்த அதிர்வில் கூரை வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்து, 3 வீடுகளும் முற்றிலுமாக தரைமட்டமாகின.

தீயணைப்புத் துறையினர் போராட்டம்

தகவல் அறிந்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள், அப்பகுதி மக்களின் உதவியோடு நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள்ளேயே வீடுகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக, வீடுகளில் இருந்தவர்கள் சமயோசிதமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சீர்காழி காவல் துறையினர், அலட்சியமாக தீ வைத்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக சார்பில் உடனடி நிவாரண உதவிகள்

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத் உத்தரவின் பேரில், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக களத்தில் இறங்கினர். மாவட்டச் செயலாளர் கோபிநாத் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தவெக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருட்களான 25 கிலோ அரிசி, காய்கறிகள், போர்வை, தலையணை மற்றும் பாய்கள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏதுவாக, அருகில் தங்குமிடம் ஏற்பாடு செய்ய கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியவர், வீடு எரிந்து பாதிக்கப்பட்ட சாந்தி என்பவரின் மகளின் பிரசவச் செலவிற்காக உடனடி நிதியுதவி வழங்கி உதவினர்.

மேலும், "தமிழக அரசின் புதிய வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட இந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையைப் பெற்றுத்தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என தவெக நிர்வாகிகள் உறுதியளித்துச் சென்றனர்.

காலிமனையில் வைத்த தீயால் 3 குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பது அண்ணா நகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.