மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகே பள்ளி வாகனத்தை வழிமறித்து, அதன் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்து, கற்களை வீசி சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது தப்பியோட முயன்ற ஒரு எதிரிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் முன்னிலையில் வன்முறை
கடந்த 07.11.2025 அன்று மாலை 5.00 மணியளவில், காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியில் செயல்படும் DMI செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியின் மினி பேருந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பாளர்களுடன் மயிலாடுதுறை மாவட்டம், பூதலுார், அரசலங்குடி, சங்கரன்பந்தல் ஆகிய இடங்களுக்கு சென்று கொண்டிருந்தது.பொறையார் காவல் சரகத்திற்குட்பட்ட அரசலங்குடி என்ற இடத்தில் பள்ளி வாகனம் சென்றபோது, சாலையின் நடுவில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி வாகன ஓட்டுனர் ஆனந்த் (40), வாகனம் செல்வதற்காக வழிவிடச் சொல்லி ஹாரன் அடித்தபோது, ஆத்திரமடைந்த மூன்று நபர்கள் பள்ளி வாகனத்தை வழிமறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலே அவர்கள் ஓட்டுனர் மற்றும் வாகனத்தில் இருந்தவர்களை ஆபாசமாக திட்டியதுடன், சாலையில் கிடந்த கற்களை எடுத்து பள்ளி வாகனத்தின் முகப்பு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாகனத்தில் பயணித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இந்த வன்முறையைக் கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயத்தில் அலறி அழ ஆரம்பித்தனர்.
வழக்குப் பதிவு மற்றும் தனிப்படைகள் அமைப்பு
இச்சம்பவம் தொடர்பாக, பள்ளி வாகனத்தின் ஓட்டுனர் ஆனந்த் (40), கனகசபை, மெயின்ரோடு, திருவிளையாட்டம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொறையார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தில் ஈடுப்பட்டது பூதனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜானி என்பவரது மகன் 20 வயதான ஆகாஷ், காளிதாஸ் என்பவரது 20 வயது மகன் கபிலன் மற்றும் பெருவேலி மேலத்தீருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் 23 வயதான தாமரைச்செல்வன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில், குற்றவாளிகளை தேடிப்பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
* சீர்காழி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் ஒரு தனிப்படை. * பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஒரு தனிப்படை. * மயிலாடுதுறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் ஒரு தனிப்படை
கைது நடவடிக்கை: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு எலும்பு முறிவு
தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், இவ்வழக்கின் மூன்றாவது எதிரியான தாமரைச்செல்வன் கடந்த 08.11.2025 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.தலைமறைவாக இருந்த மற்ற இரண்டு எதிரிகளைத் தொடர்ந்து தேடிவந்த நிலையில், எதிரி ஆகாஷ் பொறையார் காவல் சரகம் பூதனூர், காளியம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாகப் பொறையார் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அங்குச் சென்றபோது, அவர்களைக் கண்ட எதிரி ஆகாஷ் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தப்பிக்க முயற்சி செய்து, அங்கிருந்து அருகே உள்ள வயலில் ஓடியுள்ளார். சரணடையுமாறு அறிவுறுத்திய பின்னரும், ஆகாஷ் தொடர்ந்து வேகமாக ஓடியதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டது.உடனடியாக காயம்பட்ட எதிரி ஆகாஷ் காவல்துறையினரால் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாவு கட்டு போடப்பட்டுள்ளது. தற்சமயம் எதிரி ஆகாஷ் நல்ல நிலையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர், தலைமறைவாக இருந்த மற்றொரு எதிரியான கபிலன் என்பவரும் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று எதிரிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பள்ளி வாகனத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்ட ஆகாஷ் சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்கும் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.