மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 67 பேர் இதுவரை குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்சோ வழக்கிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட இரு ரவுடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போக்சோ வழக்கு மற்றும் ரவுடிசம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கஞ்சனூர் புதுத்தெருவைச் சேர்ந்த சித்திருப்பு என்பவரது மகன் மூர்த்தி (44), என்பவர் கடந்த 05.09.2026 அன்று 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் அழகம்மாள் விசாரணையை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் மூர்த்தியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார்.

Continues below advertisement

அதேபோல, சீர்காழி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கொண்டல் வள்ளுவக்குடி வடக்கு தெரு, ஏசுப்பிள்ளை என்பவரது மகன் விக்னேஷ் (22), என்பவர் கடந்த 13.09.2026 அன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவ்விருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B.சினேஹா பிரியா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், மூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடப்பாண்டில் 67 பேர் மீது பாய்ந்த குண்டாஸ் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் (2026) குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை;

* கொலை வழக்குகள்: 05 நபர்கள்

* பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்:26 நபர்கள்

 * மதுவிலக்கு குற்றங்கள்: 10 நபர்கள்

 * கஞ்சா விற்பனை: 21 நபர்கள்

 * குட்கா விற்பனை: 01 நபர்

 * பாலியல் குற்றங்கள்: 04 நபர்கள்

என மொத்தம் 67 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் dr.சினேஹா பிரியா தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தயவுதாட்சண்யமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்டு ரகசியம் 

மேலும், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து எவ்வித அச்சமுமின்றி காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.