தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 2000 -ம் ஆவது கோயில் குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செஅடுத்த திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 




கோயில் வரலாறு 


முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை, வீரபத்திரரை கொண்டு தட்சனின் தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்த தலமாகவும் விளங்குவதால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது. கோயிலின் வரலாறு குறித்து தக்கயாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 




பாலாலயம் 


இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகமானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மகா கும்பாபிஷேகம் விழா செய்ய தருமபுரம் ஆதீனம் மற்றும் அவ்வூர் பக்தர்கள் முடிவெடுத்து அதற்காக திருப்பணிகளை கடந்த ஆண்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து பாலாலயம் பூஜைகள் செய்து பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். 




அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிய காட்டிட வேலைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் கடந்த ஒர் ஆண்டாக நடைபெற்று நிறைவுற்றது. அதனை அடுத்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கும்பாபிஷேக தினமான இன்று கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 -ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், கடந்த 27-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின.




தொடர்ந்து இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. தொடர்ந்து சிவாசாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயில் சுற்றி வலம் வந்து, கோயில் கோபுர கலசத்தை அடைவார். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஓத,




மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் காலை 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றும். இதில் தர்மபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.




திமுக ஆட்சியில் 2000 வது கும்பாபிஷேகம்


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் 2000 ஆவது கோயில் கும்பாபிஷேகம் இதுவாகும். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்ய உள்ளனர்.