சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கதிராமங்கலம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளி ஒருவரை, அவ்வழியாகச் சென்ற தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உடனடியாகத் தமது காரை நிறுத்தி, மனிதநேயத்துடன் உதவிய செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது. 

Continues below advertisement


விபத்து நிகழ்ந்த விதம்


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான 56 பாலு. இவர் விவசாயத் தொழிலாளியாகப் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று பாலு தமது சொந்த வேலை காரணமாகச் சைக்கிளில் கதிராமங்கலம் கிராமத்திற்குச் சென்றிருந்தார். வேலைகளை முடித்துக்கொண்டு, சைக்கிளில் அவர் மீண்டும் தமது ஊரான கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.


அப்போது கதிராமங்கலம் கடைவீதியை அடைந்த சமயம் எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பாலுவின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய பாலு சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்து வலியால் துடித்துத்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடைவீதிப் பகுதி என்பதால் மக்கள் கூடி பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் பாலுவுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காமல் சற்று நேரம் தாமதம் ஏற்பட்டது.


அமைச்சரின் திடீர் வருகை 


இந்தச் சூழ்நிலையில், அப்பகுதியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அவ்வழியாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கார்  சென்று கொண்டிருந்தது. சாலையோரத்தில் மக்கள் கூட்டம் இருப்பதையும், ஒருவர் காயமடைந்து கிடப்பதையும் கவனித்த அமைச்சர் மெய்யநாதன், உடனடியாகத் தமது ஓட்டுநரை அழைத்து வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார்.


வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர், காயமடைந்து கிடந்த பாலுவைப் பார்த்து பாலுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். காயம் தீவிரமானது என்பதை உணர்ந்த அமைச்சர், சிறிதும் தாமதிக்காமல், தன்னுடன் பாதுகாப்புக்கு வந்திருந்தவர்களின் காரை உடனடியாக வரவழைத்தார். அமைச்சரின் உத்தரவின் பேரில், காயமடைந்த பாலுவை தூக்கி, அமைச்சருடன் வந்திருந்த  மற்றொரு காரில் ஏற்றி வைத்தார். பின்னர், காரின் ஓட்டுநரிடம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.பாலுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னரே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.


மருத்துவமனைக்கு சென்று அக்கறை காட்டிய அமைச்சர் 


விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளியை மருத்துவமனைக்கு அனுப்பியதோடு நிற்காமல், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமது அடுத்த வேலைகளை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கே நேரில் சென்றார். அங்குச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலுவைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் பணியிலிருந்த உயர் மருத்துவர்களை அழைத்து, விபத்தில் காயமடைந்த பாலுவுக்குத் தேவையான அனைத்துச் சிறந்த சிகிச்சைகளையும் உரிய நேரத்தில் அளித்து, அவர் விரைவில் குணமடைய முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.


சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு


அமைச்சரின் இந்தச் செயல், கடமைக்கு அப்பால் சென்று ஒரு சாமானிய விவசாயத் தொழிலாளிக்கு இக்கட்டான நேரத்தில் நேரடியாக உதவிய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் கடந்து போகாமல், ஒரு விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி, காயமடைந்தவரை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சரின் இந்தச் செயல்பாடு, அங்கிருந்த மக்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களிலும் அமைச்சரின் இந்த மனிதநேயமிக்கச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


போலீஸ் விசாரணை


இந்தச் சாலை விபத்து குறித்து வைதீஸ்வரன் கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டியைத் தேடும் பணியும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.