மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட மாங்கனாம்பட்டு கிராமத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 1-ஆம் தேதி பூட்டியிருந்த ஒரு வீட்டில் கதவை உடைத்து நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 75,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

இந்நிலையில், அந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் அதிரடியாகச் செயல்பட்டு மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 15.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பணத்தை மீட்டுள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின், கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அன்று தனது வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள அவரது தந்தை வீட்டிற்குச் சென்றிருந்தார்.

Continues below advertisement

இந்த வீட்டில் மாடியில் தனியாக வாடகைக்குக் குடியிருந்தவரும், அதே நாளில் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால், வீடு ஆள் நடமாட்டம் இல்லாமல் பூட்டியிருந்தது. இதனை அறிந்த கொள்ளையர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி 

மீண்டும் கடந்த அக்டோபர் 1-ம் தேதி அன்று காலை ஜாஸ்மின் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவுகள் பூட்டியிருந்த போதிலும், அறையில் இருந்த நான்கு பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 75,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கொள்ளையர்களின் சாமர்த்தியம் 

இந்தத் திருட்டுச் சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையாண்ட சாமர்த்தியம் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. முதலில், கொள்ளையர்கள் மாடியில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் திருடுவதற்குத் தகுந்த பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த மாடி வீட்டின் உள்பக்கம் இருந்த படிக்கட்டு வழியாகக் கீழ் தளத்தில் உள்ள தஸ்லீமின் வீட்டிற்குள் புகுந்து இந்த துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் அதிரடி நடவடிக்கை

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்து ஜாஸ்மின் அளித்த புகாரின் பேரில், ஆணைக்காரன் சத்திரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையர்களை விரைவாகப் பிடிக்கும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைத் தேடுவதற்குச் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், முக்கியச் சாலைகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்துத் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அத்துடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது, பழைய குற்றவாளிகளின் பட்டியலைச் சரிபார்ப்பது எனத் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

மூவர் கைது: நகையும், பணமும் மீட்பு

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் தனிப்படை போலீசாரால் அடையாளம் காணப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம், வளவனூர், கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் 45 வயதான எழிழேந்தி, மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் G.H ரோடை சேர்ந்த அன்பு என்பவரது 19 வயதான மகன் சேதுபதி மற்றும் புதுப்பட்டினத்தை அடுத்த தர்காஸை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் 32 வயதான திவாகர் என்பது தெரியவந்தது.

 

அவர்கள் மூவரையும் அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் இந்த மூன்று குற்றவாளிகளிடம் இருந்து, கொள்ளை போன பொருட்களில் ஒரு பகுதியாக 15.5 சவரன் தங்க நகைகள் மற்றும் கொள்ளையடித்த பணத்தில் பெரும் தொகையான ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பணத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 75,000 தான் ஆனால், மீட்கப்பட்ட ரூபாய் 7 லட்சம் இருப்பதால், குற்றவாளிகள் வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளிலும் ஈடுபட்டு, அந்தப் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டதன் மூலம், மாங்கனாம்பட்டு கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளிடமும் ஆணைக்காரன் சத்திரம் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? மீதமுள்ள நகைகள் எங்கே, மற்றும் அவர்கள் வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.