2025 - ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 21 நாட்கள் நடைபெறும் கோடைக்கால பயிற்சி முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கும் உட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளவையாக மாற்றும் வகையில், மாணவர்களுக்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் கல்வி சார்ந்த பயிற்சிகள் மட்டுமன்றி, கலை, விளையாட்டு, தொழில்நுட்பம், தன்வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பயிற்சி வகுப்புகளின் நன்மைகள்
- காலத்தை சீராக பயன்படுத்த முடியும்
- புதிய திறன்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு
- சமூக உறவுகள் விரிவடையும்
- மனஅழுத்தம் குறையும், சுறுசுறுப்பு அதிகரிக்கும்
- எதிர்கால திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும்
அந்த வகையில் 2025 - ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மயிலாடுதுறை ராஜன்தோட்டம், சாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோரும் இதில் கலந்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவால், 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு மயிலாடுதுறை, ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெறவுள்ளது.
7 வகை விளையாட்டு பயிற்சிகள்
விளையாட்டு பயிற்சி முகாமில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, ஜுடோ, பளுதூக்குதல் மற்றும் கபடி உள்ளிட்ட 7 விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி, பயிற்சியில் பங்கேற்கும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சியளிக்கப்படும்.
இலவச சிற்றுண்டிகள்
பயிற்சியின்போது காலை, மாலை இருவேளைகளிலும் சிற்றுண்டிகள் (முட்டை, லெமன் ஜுஸ், சுண்டல், பால், பழம் ) வழங்கப்படும் மற்றும் 21 நாள் கோடைகால பயிற்சி முகாம் முடிந்தபின் பயிற்சிப்பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். விளையாட்டு முகாமானது முற்றிலும் பாதுகாப்பாகவும் மற்றும் குடிநீர் வசதிகளுடன் செயல்படும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
கூடுதல் தகவல்கள்
மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலகம், சாய் விளையாட்டரங்கம், மயிலாடுதுறை நேரிலோ அல்லது தொலைப்பேசி எண்: 7401703459 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.