மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் மனிதர்கள், கால்நடைகள் என நாய்கடி ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.


தொடரும் நாய்க்கடி சம்பவங்கள் 


சமீப காலமாக நாய்கடித்ததாக செய்திகள் பரவலாக வந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் அதிகளவில் இந்த நாய்கடிக்கு ஆளாகுவதும், அதற்கு தெருநாய்கள் மற்றும் இன்றி வீடுகளில் வளர்க்கப்படும் பல்வேறு இன நாய்களும் கடிப்பதில் விதிவிலக்கு இன்றி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தற்போது கூட இந்த செய்தியினை படித்துக்கொண்டிருக்கும்போது கூட தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு குழந்தைகள், முதியவரைகள், பாதசாரிகள், சைக்களில், பைக் என சென்று கொண்டிருப்பவரை தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். 




நாய்க்கடியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு 


சா்வதேச அளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழகமும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதன்மை வகிக்கின்ளது. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது. கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன. உலகில் நிகழும் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க் கடி உயிரிழப்பில் 36 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. அதைவிட வேதனையான விஷயம், வெறிநாய்க் கடியால் உயிரிழப்பவா்களில் 30 இருந்து - 60 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகும். சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் நாள்தோறும் குறைந்தது 30 பேராவது நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  




மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்த நாய்க்கடி


மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு, பணங்தோப்பு தெரு, மற்றும் டபீர்தெரு, தோப்பு தெரு, சிவப்பிரியாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெரு நாய்கள் மனிதர்கள் ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கடித்து வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அது தொடர்பாக இதுநாள் வரை அரசு சார்பில் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியைச் சார்ந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனை  பார்த்து அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையடைந்து, ரத்தம் சொட்ட சொட்ட அலறிய ஆட்டினை நாய்களிடம் மேலும் கடி வாங்காமல் மீட்டனர்.




முன் முனைப்போ, திட்டமோ இல்லை


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களால் ஆடுகள் மட்டுமல்லாமல் குழந்தைகளும், சிறுவர்களும் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளியாகி அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நகராட்சி மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையிலேயே  அறிவித்திருக்கிறார்கள்.  இருந்த பொழுதிலும் பல்வேறு நகராட்சிகளிலும், ஊராட்சிகளிலும் தெரு நாய்களை பிடிப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திட முன் முனைப்போ, திட்டமோ இல்லாததுதான் இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலை ஏற்பட காரணமாகவுள்ளது என்றும், அரசின் திட்டங்களை அதி முக்கியமான அவசரமான விஷயங்களை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை  எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும்,




வாயில்லா ஜீவனான ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தொடர்ந்து ஏற்படும் இப்படிப்பட்ட கொடூர ஆபத்து மற்றும் பாதிப்பில் இருந்து காப்பாற்றிட, உடனடியாக தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களையும், தெருநாய் களையும்  பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலில் குட்டியை கடிக்கத் தொடங்கி, அதன் இரத்த வாடை அதிகரித்து தற்பொழுது பெரிய ஆடுகளையே கடிக்க முற்படும் நாய்களால், நிச்சயமாக குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் கூட  இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது என்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு பொது மக்களையும், சிறுவர்களையும் காப்பாற்றிட முன் வர வேண்டும் என அழுத்தமான கோரிக்கையை நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும்  கோரிக்கையாக விடுத்துள்ளார்.