மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர்.
மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டம்
தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.
மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. மேலும் உச்சி நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் வழிகாட்டுதலும் கூறி இருந்தது. ஆனால் அதனை சுருக்குமடிவலை பயன்படுத்தும் மீனவர்களால் முழுமையாக நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.
சுருக்கமடி வலைக்கு எதிரான கிராமங்கள் ஒன்றிணைந்து கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்பட்டு வருகின்றன. சுருக்கமடி வலைக்கு எதிரான கிராமங்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் கிராம நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீர்காழி பொறுப்பு கோட்டாட்சியர் யுரேகா தலைமையிலும், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூம்புகார் தலைமையிலான சுருக்குமடி வலை பயன்படுத்தும் பூம்புகார் , திருமுல்லைவாசல், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, மடவாமேடு, கூழையார், கொட்டாய்மேடு, புதுக்குப்பம், வெள்ளமணல், மடத்துங்குப்பம் ஆகிய 10 கிராமங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவு
கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் சுருக்கு மடி அடிப்படையில் பிடிக்கப்படும் மீன்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யக்கூடாது, அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் பூம்புகார் தலைமையிலான மீனவ கிராமங்களால் ஏற்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.