பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் 'அன்பு கரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
அன்பு கரங்கள் திட்டம்
சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள இத்தகைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். தங்களது இரு பெற்றோர்களையும் இழந்து உறவினர்களின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள், கல்வி கற்பதில் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்வதை முதலமைச்சர் ஆழ்ந்து உணர்ந்தார். இக்குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் எவ்விதத் தடையும் இன்றி கல்வியைத் தொடரவும், 18 வயது வரை அவர்களுக்கு நிதி ரீதியான ஆதரவை வழங்கவும் 'அன்பு கரங்கள்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதம்தோறும் 2000 ரூபாய்
இந்த உதவித்தொகை மாதந்தோறும் ரூ.2000 ஆக வழங்கப்படும். மேலும், 18 வயதுக்குப் பிறகு, பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடரவும், உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்று சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் நோக்கம்
'அன்பு கரங்கள்' நிதி ஆதரவு திட்டம், இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கும், ஒரு பெற்றோரை இழந்து மற்றொரு பெற்றோரின் பராமரிப்பில் இயலாத குழந்தைகளுக்கும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் உதவும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பின்வரும் குழந்தைகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்: இவர்களின் இரு பெற்றோர்களும் இயற்கை எய்தியிருக்க வேண்டும்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்றிருந்தால்: பெற்றோரில் ஒருவர் இறந்த பிறகு, மற்றொரு பெற்றோர் குழந்தையைப் பராமரிக்க இயலாமல் கைவிட்டிருக்க வேண்டும்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளி என்றால்: பெற்றோரில் ஒருவர் இறந்து, உயிருடன் இருக்கும் மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்து குழந்தையைப் பராமரிப்பதில் சிரமம் இருப்பின்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்: பெற்றோரில் ஒருவர் இறந்த பிறகு, உயிருடன் இருக்கும் மற்றொரு பெற்றோர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தால்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்ந்து வந்தால்: பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு குழந்தையைப் பராமரிப்பதில் இயலாத நிலையில் இருந்தால்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களுடன் அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
- குடும்ப அட்டை நகல்
- குழந்தையின் ஆதார் அட்டை நகல்
- குழந்தையின் வயது சான்று நகல்
- குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஆவணங்கள்
மேற்கண்ட ஆவணங்களுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5-ம் தளம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609 305 என்ற முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டம் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய ஒளியை ஏற்றி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.