மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி திறனை அறிந்து அதற்கேற்ப அவர்களைத் தயார்படுத்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தேர்வு ஒன்றினை நடத்திட உத்தரவு பிறப்பித்துள்ளார்.


திறனாய்வு தேர்வு


தமிழகத்தில் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் திறனை அறிந்து அதற்குத் தக்கவாறு அவர்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வுகள் வைத்து அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று கல்வித்துறை சார்பில் வந்துள்ளதாகவும், அதில் 10ஆம் வகுப்பு இல்லாமல் தற்போது 3, 5 மற்றும் 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.




பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் அண்மையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தபோது, அங்கு  கேள்விகளுக்கு உரிய பதிலை கூறுவதில் மாணவர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். இதனை கண்ட ஆட்சியர் மகாபாரதி  மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிட்டார். 


அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 136 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  மாவட்ட கற்றல் அடைவு ஆய்வுத் தேர்வு  மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாட பிரிவுகளுக்கு தலா முப்பது மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அடைவு ஆய்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மாணவர் அடைவுத் தேர்வினை கைவிட கோரி தீர்மானம்


இந்நிலையில்  இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாணவர் அடைவுத் தேர்வினைக் கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திருமுருகன் கூறுகையில், ’’தமிழ்நாடு அரசு தனித்துவமான கல்விக் கொள்கை வகுத்து இன்னும் நடைமுறைப்படுத்தாத சூழலில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் அடைவு தேர்வு வைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும்,




இந்த திறனாய்வு தேர்வு என்பது இதுவரை தமிழகத்தில் இல்லாத ஒன்று, மேலும் இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ள சரத்து. அதில்தான் 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திறனாய்வுத் தேர்வு என்பது உள்ளது, ஆகையால் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டில் மறைமுக இந்த புதிய கல்வி கொள்கையினை இது புகுத்துவதாக அமைந்துள்ளது.  ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக காலாண்டு தேர்வுக்கு சரிவர வகுப்புகள் எடுக்க முடியாமல், மாணவர்களுக்கு கல்வி பாதிப்பதோடு கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்கள்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்’’ என தெரிவித்தார்.




மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் கூறுகையில், ’’அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தினை ஆய்வு செய்து அவர்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து மேலும் கல்வியில் மாணவர்களை மேம்பட்ட செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் முயற்சியில் இந்த தேர்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் தனித்துவமாக நடைபெறுகிறது. இதற்கும், புதிய கல்வி கொள்கைக்கும் துளியும் தொடர்பு கிடையாது. இது தொடர்பாக முன்னதாகவே கூட்டம் நடத்தி ஆசிரியர் மத்தியில் முடிவு செய்யப்பட்டது. தற்போது கூட இது தொடர்பாக மாற்று கருத்து இருப்பின் அதனை ஆசிரியர்கள் தாராளமாக தெரிவிக்கலாம், இது நமது மாவட்டத்தின் மாணவர்களின் நலன் சார்ந்த நடத்தப்படும் தேர்வுதான் என்பதை  அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.