மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளானது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மகத்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

Continues below advertisement

மனித சங்கிலியால் உருவான 'வாக்களித்த விரல்'

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, நூற்றுக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தேர்தலில் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 'மையிட்ட விரல்' வடிவத்தை மனித சங்கிலியாக உருவாக்கிப் பிரமிக்க வைத்தனர்.வான்வழியே பார்க்கும்போது (Drone View), தரையில் ஒரு பிரம்மாண்டமான கை விரல் நீட்டி நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அந்த வடிவத்தின் மையத்தில், "100% வாக்களிப்போம்!" என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று இடம்பெற்றிருந்தது.

ஜனநாயகக் கடமையை அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டும் என்பதையும், குறிப்பாக 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதையும் பறைசாற்றும் விதமாக இந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் தலைமை

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டுத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை வாக்களிப்பதுதான். தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் நாளில் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை அதிகப்படியான வாக்குப்பதிவை உறுதி செய்யப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மகளிர் சுயஉதவிக் குழுவினரின் இந்த முன்னெடுப்பு, பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்." என்றார்.

அரசு அலுவலர்கள் பங்கேற்பு

இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, மகளிர் திட்ட திட்ட அலுவலர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து வடிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரையா, வட்டாட்சியர் (தேர்தல்) ராகவன் மேலும், பல அரசுத்துறை பணியாளர்களும், தன்னார்வலர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழிப்புணர்வு உறுதிமொழி

நிகழ்ச்சியின் இறுதியில், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" என்றும், "தேர்தல் நாளில் தவறாமல் எனது வாக்கைப் பதிவு செய்வேன்" என்றும் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் விநியோகிக்கப்படும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும், ஸ்டிக்கர்களையும் ஆட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. மகளிர் குழுவினரின் இந்த கூட்டு முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு, தேர்தல் திருவிழாவில் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.