மயிலாடுதுறை: தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கி, மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ்திசைக் காற்றுகளின் (Easterlies) வரவு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை மாற்றத்தால் அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 9) இரவு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கான முக்கிய பாதுகாப்பு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்;
மின் பாதுகாப்பு: மழைக் காலங்களில் மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை இயக்க வேண்டாம்.
கட்டிட பாதுகாப்பு: பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டிடங்களின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விளம்பரப் பலகைகளின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்.
விவசாயிகள் கவனிப்பிற்கு: அறுவடை செய்த மற்றும் விளைபொருட்களை மழையில் நனையாமல் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும். கால்நடைகளைத் திறந்த வெளியிலோ அல்லது மின் கம்பங்களின் அடியிலோ கட்ட வேண்டாம். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை முன்கூட்டியே சேமித்து வைக்கவும்.
பயணங்கள்: அவசியமற்ற வெளிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பான இடங்களில் தங்குவது நலம். குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையும், அங்கு செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அவசர கால உதவி எண்கள்
மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் அவசர காலப் பணிகளுக்குத் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவி அல்லது புகார்களுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:04364-222588
கட்டணமில்லா எண்: 04364-1077
மின்சாரத் துறை (மயிலாடுதுறை): 04364-252218 / 94984 82319
சீர்காழி பகுதி: 04364-279301 / 94458 54006
மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
