சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக 'தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை' அறிவித்துள்ளது. இந்த விருதுகள், தமிழகத்தின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பின் சாராம்சம்:
அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில், சுற்றுலாத் துறை அமைச்சர், சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். அதில், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது ஒரு முக்கியமான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பின் அடிப்படையில், தற்போது இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதின் நோக்கம்
இந்த விருதுகள், தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தொழில் முனைவோரையும், நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. சுற்றுலாத் துறையின் பல்வேறு அம்சங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிப்பதன் மூலம், மேலும் பல புதிய தொழில் முனைவோர்கள் இத்துறைக்கு வர ஊக்குவிக்கப்படுவார்கள். இது மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த விருதுகள், பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கு சாதகமாகப் பங்களித்த பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
15 பிரிவுகளில் விருதுகள்
2025 -ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, உலக சுற்றுலா தினத்தன்று இந்த விருதுகளின் முதல் பதிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த விருதுகள் பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த பயண பங்குதாரர்
- சிறந்த விமான பங்குதாரர்
- சிறந்த தங்குமிடம்
- சிறந்த உணவகம்
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்
- சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம்
- சுத்தமான சுற்றுலாத்தலம்
- பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர்
- சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்
- சிறந்த MICE (Meetings, Incentives, Conventions, and Exhibitions) சுற்றுலா அமைப்பாளர்
- சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்
- சிறந்த சுற்றுலா வழிகாட்டி
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா வினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல்
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்
இந்த விரிவான பிரிவுகள், சுற்றுலாத் துறையின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கி, தகுதியான பங்களிப்பாளர்களை அங்கீகரிக்க உதவும்.
விண்ணப்பிக்கும் முறை
விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள், www.tntourismawards.comஎன்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 15, 2025 ஆகும்.
மாவட்ட ஆட்சியரின் அழைப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும், தங்களுக்குப் பொருத்தமான விருதுப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விருதுகள், சுற்றுலாத் துறையில் உள்ள திறமையையும், கடின உழைப்பையும் அங்கீகரித்து, தமிழகத்தின் சுற்றுலாத் துறையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விருதுகள், மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.