குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெற்றோர் - வழி மறித்த ஆட்சியர் - காரணம் என்ன?

மயிலாடுதுறை அருகே தலைகவசம் அணியாமல் பள்ளி விட்டு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Continues below advertisement

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அதுவும் குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Continues below advertisement

அதிகரிக்கும் சாலை விபத்துகள் 

நாடுமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இருந்த போதிலும் விபத்துகளின் எண்ணிக்கை என்பது குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த சாலை வாரம் அனுசரிக்கப்படுகிறது.


விபத்துக்கான முக்கிய காரணிகள் 

1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு, தலைகவசம் அணியாமல் செல்வது உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.


விபத்தை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் 

இந்நிலையில் நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது. 


ஆட்சியர் அட்வைஸ் 

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 24 மணி நேரம் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு அவர் திரும்பியுள்ளார். அப்போது செம்பனார்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாணவர்களை அவர்களது பெற்றோர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்ததைக் கண்டுள்ளார்.


உடனடியாக தனது வாகனத்தை ஓட்டுநரிடம் கூறி நிறுத்த சொல்லி கீழே இறங்கிய ஆட்சியர் மகாபாரதி சாலையில் தலைக்கவசம் அணியாமல் பள்ளிக்கு குழந்தைகளை வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோர்களை நிறுத்தி அழைத்து தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்து கூறி இனி வரும் காலங்களில் தலைகவசம் அணிந்து சாலையில் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆட்சியரின் அறிவுரையை ஏற்று இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் தவறாமல் தலைகவசம் அணிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola