மயிலாடுதுறை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு’ பணிகளுக்கான சுய கணக்கெடுப்பு முறை நாளை (17.07.2026) முதல் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்கள் மொபைல் செயலி மற்றும் இணையதளம் வழியாக தங்களின் விவரங்களை தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

முதன்முறையாக டிஜிட்டல் பதிவு

டிஜிட்டல் சுய கணக்கெடுப்பு: நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே கணக்கெடுப்பில் பங்கேற்கும் வகையில் இந்த டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், 17.07.2026 முதல் 31.07.2026 வரை உள்ள 15 நாட்களுக்குள் தங்களது அலைபேசி (Mobile) மூலமாக இந்த சுய கணக்கெடுப்பை (Self Enumeration) மேற்கொள்ளலாம். இதற்காக பொதுமக்கள் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்குச் சென்று தங்களது மற்றும் குடும்பத்தினரின் விவரங்களை எளிதாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவரங்களை பதிவு செய்யும் முறை எப்படி?

சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விளக்கங்களை அளித்துள்ளது:* இணையதள முகவரி: பொதுமக்கள் தங்களது மொபைல் அல்லது கணினி மூலம் https://se.census.gov.in  என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.* 33 கேள்விகள்: இணையப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள குடும்பத் தலைவரின் பெயர், முகவரி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 முக்கியக் கேள்விகளுக்குத் துல்லியமான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.* 11 இலக்க SE ID: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன், பயனாளரின் கைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். அதில் 11 இலக்க சுய கணக்கெடுப்பு அடையாள எண் (SE ID) இடம்பெற்றிருக்கும். பொதுமக்கள் இந்த 11 இலக்க எண்ணைப் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Continues below advertisement

* முக்கியக் கட்டுப்பாடு: ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு கைபேசி எண்ணை (One Mobile Number per Family) மட்டுமே இந்தத் தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுத்த வேண்டும்.

* கணக்கெடுப்பாளர்களிடம் SE ID-ஐ மட்டும் அளித்தால் போதும்!

இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு செய்துகொண்ட பொதுமக்கள், அடுத்த கட்டமாக தங்கள் வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் மீண்டும் முழு விவரங்களையும் கூற வேண்டிய அவசியமில்லை.

கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

"வரும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகளுக்காக ஆசிரியர்கள் உங்கள் இல்லங்களுக்கு வருவார்கள். அப்போது, சுய கணக்கெடுப்பின் மூலம் உங்களுக்குக் கிடைத்த 11 இலக்க SE ID-யை மட்டும் அவர்களிடம் தெரிவித்தால் போதுமானது. கணக்கெடுப்பாளர்கள் தங்களிடம் உள்ள 'Census App' மூலம் அந்த எண்ணை உள்ளிட்டதும், நீங்கள் பதிவு செய்த விவரங்கள் நேரடியாகத் திரையில் தோன்றி உறுதி செய்யப்படும்." இதன் மூலம் பொதுமக்களின் பெரும் பகுதி நேரம் மிச்சமாவதுடன், அலட்சியங்களால் ஏற்படும் பிழைகளும் தவிர்க்கப்படும்.

சந்தேகங்களைத் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பொதுமக்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் சுய கணக்கெடுப்பு முறையில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளோ ஏற்பட்டால், அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு 'மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை' (Control Room) அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களுக்குக் கீழே உள்ள எண்களைத் தொடர்புகொள்ளலாம்:தொலைபேசி எண்: 04364 - 299304கட்டணமில்லா உதவி எண் (Toll-Free): 1855

தேசிய கடமையாகக் கருதி ஒத்துழைக்க வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கூறுகையில்;"நீங்கள் இன்று வழங்கும் துல்லியமான புள்ளிவிவரங்கள் தான், நாளைய இந்தியாவின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையப் போகின்றன. கல்வி, சுகாதாரம், தூய்மையான குடிநீர், தரமான சாலைகள், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு போன்ற உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை அரசு திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்தத் தரவுகள் இன்றியமையாதவை. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்ப விவரங்களைச் சரியாகப் பதிவு செய்வதோடு, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இந்த சுய கணக்கெடுப்பில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குத் தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கி, இதனை ஒரு தேசியக் கடமையாகக் கருதி செயல்பட வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.