மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருண் பிரியா தனியார் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சிறுவன் கிஷோரின் பெற்றோருக்கு, மருத்துவ அலட்சியம் மற்றும் சேவைக் குறைபாட்டிற்காக ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (Nagara Consumers Grievance Redressal Commission) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட சோகம்

மயிலாடுதுறை மாவட்டம், மேல மங்கநல்லூரைச் சேர்ந்த ஆசிரியர் பாலசுப்ரமணியன் - சசிகலா தம்பதியரின் மகன் கிஷோர்  இச்சிறுவனுக்கு கடந்த ஜனவரி 28, 2024 அன்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறையில் உள்ள அருண் பிரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு குடல் வால் அழற்சி (Appendicitis) இருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். மறுநாள் காலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Continues below advertisement

தெளியாத மயக்கம் 

அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நேரம் ஆகியும் கிஷோர் மயக்கம் தெளியாமல் இருந்துள்ளான். பதற்றமடைந்த தந்தை பாலசுப்ரமணியன் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது, "உங்கள் மகனுக்கு ஒன்றும் இல்லை, சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்," என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், நேரம் கடந்து செல்ல, தாய் சசிகலா மற்றும் உறவினர்கள் மீண்டும் மருத்துவரிடம் கேட்டபோது, அவர்கள் தொடர்ந்து மழுப்பலாகவே பதில் அளித்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் கிஷோர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம்

கிஷோரின் மரணத்திற்குக் காரணம், மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதது, முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, போதிய ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரண வசதிகள் இல்லாததுதான் என உறவினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், விரைந்து நடவடிக்கை எடுக்கக் காலதாமதமானதால், மார்ச் 22, 2024 அன்று தமிழர் தேசிய முன்னணி சார்பில் பேராசிரியர் முரளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவர்களின் பதிவு நீக்கம்

இச்சம்பவம் குறித்து, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்குப் (Tamil Nadu Medical Council) புகார் அனுப்பப்பட்டது. புகாரை விசாரித்த கவுன்சில், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அபினவ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரதிதாசன் ஆகியோரின் பெயர்களை ஆறு மாத காலத்திற்கு மாநில மருத்துவப் பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு

இதையடுத்து, உயிரிழந்த சிறுவன் கிஷோரின் பெற்றோர்களான பாலசுப்ரமணியன் - சசிகலா தம்பதியினர், நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். புகார்தாரர் சார்பில் வழக்கறிஞர்கள் V.பாலாஜி மற்றும் V.யுகேந்திரகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கினை விசாரித்த ஆணையத்தின் தலைவர் கே.மோகன்தாஸ், உறுப்பினர்கள் பி.எம். முத்துக்குமார், மு.சிவகாமி செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது.

உத்தரவு விவரம்

*இழப்பீடு: மருத்துவர்கள் பாரதிதாசன் (அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் அபினவ் (மயக்க மருந்து நிபுணர்) ஆகியோர் கூட்டாகவோ அல்லது தனித் தனியாகவோ மருத்துவ அலட்சியம் மற்றும் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரருக்கு ரூ.30,00,000/- (முப்பது லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும்.

* காலக்கெடு மற்றும் வட்டி: உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும். காலத்தாமதம் செய்தால், 9% வருடாந்திர வட்டியை செலுத்த வேண்டும்.

* வழக்குச் செலவு: புகார்தாரரின் வழக்குச் செலவிற்காக ரூ.30,000/- செலுத்த வேண்டும்.

நாகை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, மருத்துவ அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சற்று ஆறுதலான நீதி கிடைத்துள்ளதாகப் பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.