மயிலாடுதுறை: விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், வேளாண் விளைபொருட்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரவும் வழிவகுக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மாநிலம் முழுவதும் ”100 மதிப்புக்கூட்டும் அலகுகள்” துவங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

திட்டத்தின் முக்கிய நோக்கம்

வேளாண் விளைப்பொருட்களை அப்படியே விற்பனை செய்வதைவிட, அவற்றைச் சுத்திகரித்து, பதப்படுத்தி, அல்லது வேறு வடிவங்களில் மாற்றுவதன் மூலம் (இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மதிப்புக்கூட்டல்) உற்பத்தியாளருக்கு அதிக லாபம் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பொருளாதார ரீதியாகப் பலமடைய முடியும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள், வேளாண் அல்லது தோட்டக்கலை விளைப்பொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மதிப்புக்கூட்டும் தொழில்களைத் தேர்வு செய்யலாம்.

அள்ளி வழங்கும் மானிய சலுகைகள்

தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் தொழில்முனைவோருக்குத் தாராளமான மானியம் மற்றும் வட்டிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Continues below advertisement

  • பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 25% மானியம் 
  • சிறப்புப் பிரிவினர் (பெண்கள், தொழிலில் பின்தங்கிய வட்டாரத்தில் உள்ளோர், ஆதிதிராவிடர்/பழங்குடியினர்) திட்ட மதிப்பில் 35% மானியம் (பொது மானியத்துடன் கூடுதலாக 10%) மானியம் வழங்கப்படும்

வரம்பு: பயனாளிகளுக்கு அதிகபட்சமாக, அவர்களின் திட்ட மதிப்பீட்டில் 25% அல்லது 35% மானியம் அல்லது ரூ.1.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அந்தத் தொகை, வங்கி கடனில் பின்னேற்பு மானியமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இதில், முதல் தவணையாக 60% தொகையும், மீதமுள்ள 40% தொகையும் வழங்கப்படும்.

வட்டி மானியமும் கடனுதவியும்

தொழில் துவங்க விரும்புவோர், தங்கள் வணிகத் திட்ட மதிப்பில் 5% தொகையினை சொந்தப் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

* மேலும், இத்திட்டத்தில் 5% வட்டி மானியம் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.

* தொழில் துவங்க விரும்புவோர் உரிய வணிகத் திட்ட அறிக்கையுடன் வங்கியைத் தொடர்புகொண்டு ஒப்புதல் பெற்று, AIF (வேளாண் உள்கட்டமைப்பு நிதி) திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 9% வட்டிக்குக் கடன் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

* உரிமை நிலை: விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்க வேண்டும். இது தனியுரிமை, கூட்டாண்மை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம்.

* ஒருமுறை மட்டுமே: ஒரு நபர்/நிறுவனம்/குடும்பம் இத்திட்டத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற இயலும்.

* தேவையான ஆவணங்கள்: விண்ணப்பங்கள் முழுமையான திட்ட அறிக்கை (Detailed Project Report) மற்றும் வங்கி ஒப்புதல் கடிதம் / வங்கி பரிந்துரை, மற்றும் இதர விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மயிலாடுதுறை மாவட்ட தொழில்முனைவோர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் https://www.agrimark.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, அதை ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சென்னையிலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.

உள்ளூர் அளவில் திட்டங்கள் குறித்த மேலதிகத் தகவல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மைத் துறையில் தொழில்முனைவோராக வளர விரும்பும் அனைத்துத் தகுதி வாய்ந்த நபர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, லாபகரமான மதிப்புக்கூட்டும் அலகுகளைத் துவங்கிப் பயனடையுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.