மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று, பிப்ரவரி 12ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் 2வது புத்தகத் திருவிழாவில் உயரத்தை அடைந்தது எப்படி என்ற தலைப்பில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "மதுரை மாவட்டம் சுன்னாம்பு என்ற கிராமத்தில் பிறந்தேன். தினமும் 18  கி.மீ நடத்துதான் பள்ளிக்கு சென்றேன். தொடாந்து பல்வேறு நிலைகளில் தேர்வுகளில் பங்கேற்று எழுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக தற்போது உள்ளேன்.  




வாழ்க்கையில் நமக்குள் என்றும் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. யாரை விடவும் நாம் குறைவானவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் வள்ளுவர். ஆக பிறவியால் அனைவரும் சமம் என உணர வேண்டும்.  சிறு வயதில் இருந்தே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  எல்லா நாட்களிலும் ஒரு அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் வலிமையாக இருந்தால் தான் நாம் எதையும் செய்ய முடியும். அதேபோல், சிறு வயதில் அதிக நேரம் விளையாட வேண்டும். பெரியவர்களாக இருந்தாலும் தினம் ஒரு மணிநேரம் நம் உடலை பேணிக்காக்க வேண்டும். ஏனென்றால் நம் உடல் சரியாக இருந்தால் நம்மால் எதையும் செய்ய இயலும், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இது இரண்டும் சேரும் போது நாம் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றும், எதையும் சாதிக்கலாம்.




சிறு பிள்ளைகள் டிவி பார்ப்பதை தவிர்த்து நிறைய விளையாட வேண்டும். இதற்கடுத்து, அறிவுள்ளவர்களாக மாற வேண்டும். இவ்வுலகில் அறிவுள்ளவராக இருப்பது மிகவும் அவசியம். “அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற குறளுக்கு விளக்கமாக அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எதும் இருந்தும் பெருமை இல்லை. அறிவுடையவர்களுக்கு வேறு எதுவும் இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை. உலகில் மிகப்பெரிய அணிகலன் அறிவு தான். அறிவை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். படிக்க வேண்டும், அறிவோடு செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு உங்கள் கனவு எதுவாக இருந்தாலும், அறிவுள்ளர்களாக, படித்தவர்களாக, உலக அனுபவங்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  தன்னை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்குபவரின் வழியில் நாம் நடக்க வேண்டும். சிறு பிள்ளைகளாக இருக்கும் நாம், ஒன்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழியில் நடக்க வேண்டும். வழிகாட்டுதல் நமக்கு எப்போதுமே தேவைப்படும். டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் மிகச்சிறந்த ஆற்றல் மிக்கவராக இருந்தவர்.




அரசர்கள் கூட அமைச்சர் ஆலோசனை படி நடந்து அரசாட்சி செய்வார்கள்.  நம்மை விட அறிவானவர்களின் வழியில் நடப்பதை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் மற்றவர்களின் துணை கொண்டு நடக்க வேண்டும்.  நம் மூளையை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைகின்றனர். அதை அடைய நாம் முக்கியமாக தியானம் செய்ய வேண்டும். மனத்தூய்மை அடைய நாம் கிடைக்கும் நேரங்களில் தியானம் செய்யலாம். யாருக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும். தவம் செய்பவர்கள் அனைவரும் பலமானவர்களாக, ஆற்றல் உள்ளவர்களாக இருக்கலாம். வெற்றி அடைய இதுவும் ஒரு காரணம் ஆகும். எதையுமே தொடர்ச்சியாக முயற்சி செய்தால் நாம் வெற்றி அடையலாம். ஒரு டாக்டராக, மாவட்ட ஆட்சியராக, இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியை அடையவும், போன்ற பல எண்ணங்களை நாம் நினைத்து கொண்டு, அதற்கு தொடர்ந்து முயற்சி செய்தால் நாம் அதுவாகவே ஆகலாம். அனைவரையும் அன்போடு நடத்த வேண்டும்.





மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். வாழ்க்கை என்பது மிக அருமையானது. நம் வாழ்க்கை நம் கையில். புத்தக கண்காட்சி மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றோம். நிறைய புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை நேசியுங்கள், புத்தகங்களை வாசியுங்கள். வெற்றி பெற்றவர்கள் அனைவருமே நிறைய புத்தகங்கள் படித்து, வாழ்வில் முன்னேறி உள்ளனர். இப்புத்தகக் கண்காட்சி வரும் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது. நாம் எல்லோரும் சேர்ந்து வலிமையான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று நிறைய திட்டங்களான “நான் முதல்வன் திட்டம்” “புதுமைப்பெண் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  காலை உணவு, மதிய உணவு, போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களையும்,புத்தகங்களையும் வழங்கினார்கள்.