மயிலாடுதுறை: தமிழக அரசு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடுமையான தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நூறு சதவீதம் முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாவட்டத்தைப் பிளாஸ்டிக் மாசற்ற பசுமை மாவட்டமாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தொடர் விழிப்புணர்வு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Continues below advertisement

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உத்தரவின் பேரிலும், நகராட்சி ஆணையரின் வழிகாட்டுதலின்படியும், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து முக்கிய வணிகப் பகுதிகளிலும் இன்று காலை முதல் அதிரடிச் சோதனைகள் மற்றும் தீவிரப் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதே நேரத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி, பேருந்து நிலைய வளாகம், கூறைநாடு, தருமபுரம் சாலை, காந்திஜி சாலை மற்றும் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய நால்ரோடு வீதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக நகராட்சி சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறைப் பணியாளர்கள் அடங்கிய ஐந்துக்கும் மேற்பட்ட பிரத்யேகக் குழுக்கள் பிரிக்கப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கினர்.

Continues below advertisement

இக்குழுவினர் நகரில் இயங்கி வரும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், மொத்த மற்றும் சில்லறை மளிகைக் கடைகள், பிரபல சைவ மற்றும் அசைவ உணவகங்கள், தேநீர்க் கடைகள், சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் பழச்சாறு விற்பனை நிலையங்கள் எனப் பரவலாக அனைத்து இடங்களிலும் அதிரடியாகப் புகுந்து சோதனையிட்டனர். கடைகளின் சேமிப்புக் கிடங்குகள், பின்புற அறைகள் மற்றும் பார்சல் கட்டும் இடங்கள் போன்றவற்றில் அதிகாரிகள் தீவிரமாக அக்குவேறு ஆணிவேறாக சோதனை நடத்தினர்.

4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

இன்று நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள மற்றும் மண்ணில் மட்காமல் சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பொதுமக்களுக்குப் பொருட்கள் வழங்கப் பயன்படுத்தப்படும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் (Carrier Bags), பிளாஸ்டிக் தாள்கள் (Plastic Sheets), உணவுப் பொட்டலங்களை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட பேப்பர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித இலைகள் மற்றும் சூடான உணவுகளைப் பார்சல் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் (Plastic Containers) ஆகியவை ஆயிரக்கணக்கில் பெட்டி பெட்டியாகக் கைப்பற்றப்பட்டன.

நகராட்சி அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 4 டன்னுக்கும் (4,000 கிலோ) அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் அனைத்தும் நகராட்சியின் லாரிகள் மூலம் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, உரிய முறையில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் விதிமுறைகளை மீறி, தடை செய்யப்பட்ட பொருட்களைத் தங்களது கடைகளில் விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் இருப்பு வைத்திருந்த மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்திய 50-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ஸ்பாட்டிலேயே பல்லாயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான அரசு அதிகாரப்பூர்வ ரசீதுகளும் வழங்கப்பட்டன. மீண்டும் இந்தத் தவற்றைத் தொடர்ந்தால் கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுச் சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர்.