மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட திருக்கோயில்களை முறையாகக் கண்டறியும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதியன்று ஐந்து நபர்களைக் கொண்ட உயர்மட்ட ஆகமக்குழு ஒன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

Continues below advertisement

இக்குழுவானது மாநிலத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களின் ஆகம வழிமுறைகள் மற்றும் மரபுகள் குறித்த விவரங்களை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காகத் தரம் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட திருக்கோயில்கள் தொடர்பான ஆகமம் சார்ந்த விரிவான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அந்தந்த மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் வாயிலாகக் குழுவின் முன் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளும் ஆவணங்களும் ஆகமக்குழுவினால் மிகுந்த கவனத்தோடும் சட்டப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பட்டியல் வெளியீடு மற்றும் தொடர் அவகாசம்

ஆகமக்குழுவினால் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டுத் தகுதிகாண் பட்டியலிடப்பட்ட சுமார் 34,971 எண்ணிக்கையிலான திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்காகத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியன்று வெளியிடப்பட்டன. இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வசதியாகப் பல்வேறு கால அவகாசங்கள் வழங்கப்பட்டன.

Continues below advertisement

ஆரம்பகட்டமாகப் பொதுமக்கள் தங்களது கருத்துகள், விடுதல்கள் ஏதேனும் இருப்பின் கருத்துருக்களைச் சமர்ப்பிக்கக் கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு மேலும் கூடுதல் அவகாசம் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி வரை கருத்துகளைத் தெரிவித்திடக் கேட்டுக்கொள்ளப்பட்டது இச்சூழலில், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தடையின்றி முழுமையாகத் தெரிவிக்கும் பொருட்டு நீதிப்பேராணை மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவும் புதிய காலக்கெடுவும்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எண் 30397 இன் கடந்த அக்டோபர் 23-ம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆகமக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த அனைத்து விவரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான இறுதி வாய்ப்பு தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற நவம்பர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் 25-ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது மேலான கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் முறைப்படித் தெரிவித்திடலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஏதுவாக மாவட்ட அளவில் உரிய விழிப்புணர்வும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளும் முகவரியும்

ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காகத் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிற்குத் தங்களது கருத்துகளை அனுப்புவதற்குத் துறை சார்ந்த முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், எண் 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034 என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம். 

மேலும், கடிதங்கள் மூலமாக மட்டுமின்றித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் தங்களது கருத்துக்களை இணைய வழியிலும் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி, நவம்பர் மாதம் 25-ம் தேதியன்று மாலை 05.45 மணிக்குள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார்.